முக்கிய அறிவிப்புகள்

நாடாளுமன்றத்தைக் கூட பாதுகாக்க தவறிய மோடி அரசு பதவி விலகவேண்டும்! NTF வெளியிடும் அறிக்கை:

#Parliment_Attack

டிச.13,2023

பத்திரிகை அறிக்கை!

நாடாளுமன்றத்தைக் கூட பாதுகாக்க தவறிய மோடி அரசு பதவி விலகவேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:

இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம் இன்று (டிச.13) பிற்பகல் புதிய நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.

22 வருடங்களுக்கு முன்னதாக 2001ல் இதே பா.ஜ.க.ஆட்சியில், (டிச.13) இதேநாளில், (பழைய) நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் இந்திய இறையாண்மைக்கும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கும் விடப்பட்ட மாபெரும் சவாலாக பார்க்கப்பட்டது. அந்தச் சம்பவம் நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்தது.

ஆனால் இன்றைய சம்பவம், நாடாளுமன்றத்தின் மக்களவை அரங்கத்தில் நடந்துள்ளது.

பிற்பகலில் மக்களவையின் பூஜ்ய நேர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்கள், பார்வையாளர்கள் மாடத்திலிருந்து உறுப்பினர்களின் இருக்கைகளில் தாவிக் குதித்து, மஞ்சள் நிற புகையை வெளிப்படுத்தும், தாங்கள் வைத்திருந்த ஸ்பிரேயை அடித்து மக்களவையில் பீதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அவையில் இருந்த எம்.பி.க்கள் எல்லாம் அலறியடித்து ஓடி இருக்கிறார்கள்; அந்தச் சமயத்தில் அவைக் காவலர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், பா.ஜ.க. அல்லாத - அதாவது, காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய லோக் தந்திரிக்கட்சி ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் மட்டுமே துணிச்சலுடன் மிகவும் சாதுர்யமாக அந்த இருவரையும் பாய்ந்து பிடித்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சி எம்.பி.க்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து, மக்களவை பார்வையாளர்கள் மாடத்திற்குள் செல்வது வரை நான்கு அடுக்கு சோதனைகள் உள்ளன.

ஒவ்வொரு கட்ட சோதனையிலும், புகைப்படம், பெயர், முகவரி, அடையாள அட்டை, தொலைபேசி, பரிந்துரைக்கும் எம்.பி.க்களின் கடிதம் போன்றவை சரிபார்க்கப்படும். அத்துடன் உடற் சோதனை, ஸ்கேனிங், மெட்டல் டிடக்டர் போன்ற சோதனைகளும் உண்டு.

ஒரு துண்டு பேப்பரோ, பேனாவோ, சில்லறை நாணயங்களோ, மொபைல் போன் கூட எடுத்துச் செல்ல முடியாது. உடுத்திய உடையைத் தவிர, வேறு எதுவுமே பார்வையாளர் மாடத்திற்குள் கொண்டு செல்ல முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பான இடத்திற்கு, புகை வீசும் குடுவையை எப்படி கொண்டு செல்ல முடிந்தது என்ற கேள்வி - நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் விழுந்துள்ள ஓட்டையை பிரதிபலிக்கிறது.

மேலும், பார்வையாளர்கள் மாடத்திற்குள் செல்பவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சென்று உட்காரவோ, பேசிக் கொண்டிருக்கவோ முடியாது. அங்கு இருக்கும் பாதுகாவலர்கள் ஒவ்வொரு பார்வையாளரையும் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். சுருக்கமாக சொல்வதானால், அங்குள்ள பாதுகாவலர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் தான் பார்வையாளர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில், இரண்டு பேர் மேலிருந்து கீழே குதிக்கும் வரை பாதுகாவலர்கள் பான்பராக் போட்டுக் கொண்டிருந்தார்களா என்ற கேள்வியும், பாதுகாப்புத் தோல்வியை வெளிப்படுத்துகிறது.

இந்தச் சம்பவத்திற்கான அடிப்படை மூலம் பா.ஜ.க. எம்.பி.யிடமிருந்து தான் துவங்குகிறது. கர்நாடகா மாநிலம், மைசூரு பெரியபட்டணா பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹா என்பவர் தான், அந்த இரண்டு வாலிபர்களும் மக்களவை பார்வையாளர்களாக வருவதற்கு பரிந்துரைக் கடிதம் அளித்து இருக்கிறார். அவருக்கு பரிச்சயம் இல்லாதவர்களுக்கா பரிந்துரை கடிதம் கொடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னை, கிண்டி ராஜ்பவன் அருகேயுள்ள சாலையில், ஒரு நடைபாதையில் எவனோ ஒரு கிறுக்கன் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து பாட்டிலை உடைத்தான் என்பதற்காக, ஆளுனர் ரவியை கொல்ல முயற்சி என்று அண்ணாமலை முதல் அத்தனை பா.ஜ.க. சங்கிகளும் தி.மு.க. அரசு, அதன் முதல்வர் பற்றி என்னென்ன அலப்பறைகள் செய்தார்கள்? சட்டம் - ஒழுங்கைப் பற்றி எப்படி எல்லாம் உருட்டினார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

அந்தச் சம்பவத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய மக்களவை சம்பவம் பல நூறு மடங்கு பாரதூரமானது இல்லையா?

பா.ஜ.க. அரசு பதவி ஏற்றதிலிருந்து கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக சிறுபான்மை விரோதம், இந்துத்துவ கருத்தியல், ஜனநாயக அழிப்பு, வெறுப்பு அரசியல், கார்பரேட்டுகளின் நலன், எதிர்க்கட்சிகள் மீதான அடக்கு முறைகள் போன்றவற்றில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதே தவிர, நாட்டின் பரந்துபட்ட வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற உயிர்நாடி விஷயங்களில் தொடர்ந்து தோல்வியைத் தான் கண்டு வருகிறது.

புல்வாமாவில் 53 இராணுவ வீரர்களை பலி கொடுத்தது, லடாக்கில் இந்திய மண்ணை சீனாவிடம் தாரை வார்ப்பது போன்ற மோடி அரசின் பல்வேறு கையாளாகாத்தனத்தை நாடே அறியும்.

இந்தச் சம்பவத்தையொட்டி, புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகருக்கு அருகே வைக்கப்பட்ட செங்கோல் கூட ஏன் தடுக்கவில்லை? செங்கோல் மோடி அரசை பாதுகாக்காமல் பலி வாங்குகிறதா? நாடாளுமன்றம் தீட்டு பட்டு விடாமல் பாதுகாக்க திரெளபதி முர்முவை (குடியரசுத் தலைவர்) நாடாளுமன்றத்திற்குள்  உள்ளே அனுமதிக்காமல்  கட்டிக்காத்த (அ)தர்மமும் மோடியை கைவிட்டது ஏன்? என்று சிலர் பகுத்தறிவு கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

இந்தச் சம்பவத்தை நிகழ்த்திய குழுவில் இருந்தவர்கள் வெளியில் வரும்போது,“சர்வாதிகாரத்தை நிறுத்து … மணிப்பூரில் வன்முறையை நிறுத்து... “ என்றும், “பாரத் மாதா கி ஜெய்…“ வந்தே மாதரம்…“ என முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட நீலம் என்ற பெண் இது அரசியல் ரீதியான போராட்டம் என்று சொல்லி இருக்கிறார்.

இது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய வார்த்தைகள்… இதன் மூலம் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கு நாட்டு மக்களை எந்த அளவுக்கு வார்த்தெடுத்துள்ளது என்பதை உணர வைத்துள்ளது. 

நாட்டில் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்கினால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள் வன்முறையை கையில் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. வன்முறை தீர்வைத் தராது என்று நம்மால் வசனம் பேச மட்டும் தான் முடியும்.

மோடி அரசின் பாசிசப் போக்கைத் தொடர்ந்து கண்டித்து வரும் ஜனநாயக அமைப்புகளும், அதன் தலைவர்களும் இதைத் தான் வலியுறுத்தி வருகிறார்கள்.

மக்களையும், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நாட்டின் மிக உயர்ந்த - மக்களாட்சியின் அடையாளமாக விளங்கக் கூடிய நாடாளுமன்றத்தையும் பாதுகாக்கத் தவறிய மோடி அரசு நாட்டை ஆள எந்தத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. எனவே மோடி அரசு உடனடியாக பதவி விலகி இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்,

பொதுச் செயலாளர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments