கல்விக் கூடமா? காவிகளின் கூடாரமா? முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்! NTF கண்டனம்!!
#CMO_Tamilnadu
#Anbil_Mahesh_Poyyamozhi
22/11/2023
கோவை:
கல்விக் கூடமா?
காவிகளின் கூடாரமா?
முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கண்டனம்!!
NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:
கோவை, துடியலூர் என்.ஜி.ஓ.காலனி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவர், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியரால் மத ரீதியான உளவியல் தாக்குதலுக்கு உள்ளான நிகழ்வு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களிடையே கடுமையான அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அபிநயா, ராஜ்குமார் என்ற ஆசிரியர்கள் அம்மாணவியை மாட்டுக்கறி உண்பவர் என்று கூறி, மாட்டுக்கறி உண்பவர்கள் கேவலமானவர்கள் என்பது போல சித்தரித்ததோடு, பிற மாணவர்கள் மத்தியில் இழிவான சொற்களால் அந்த மாணவியைத் திட்டியதோடு, அந்த மாணவி அணிந்திருந்த புர்காவைக் கொண்டு, பிற மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்யச் சொல்லி அந்த மாணவியின் சுய மரியாதையை சீர்குலைத்து, மிருகத்தனமாக நடந்திருக்கிறார்கள்.
மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் உதவி ஆணையர் தலையிட்டு காவிச் சிந்தனையுள்ள ஆசிரியர்களை கண்டித்து, சமாதானம் செய்த பிறகு பெற்றோர்கள், பிள்ளையை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அதன் பிறகும் அம்மாணவி மீது ஆசிரியர்கள் மீண்டும் முன்பை விட மோசமாக டார்ச்சர் செய்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களாக போராடியும் நியாயம் கிடைக்காமல், பொறுக்க முடியாத நிலையில், பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு, பெற்றோர்கள் நேற்று முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவியிடமும், ஆசிரியர்களிடமும் இன்று காலை முதன்மை கல்வி அதிகாரி விசாரணை செய்துள்ளார். குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை எப்படி ஒத்துக் கொள்வார்கள்? வழக்கம் போலவே அவர்கள், மாணவி தங்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்துவதாக அப்பட்டமாக புளுகி இருக்கிறார்கள்.
தொட்டதற்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி என மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க.ஆட்சியில் கல்வி நிலையங்களில் தொடர்ந்து இது போன்று நடக்கும் மதவெறிப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்தகால ஆட்சியில் கல்வி நிறுவனங்களில் காவிச் சிந்தனை கொண்ட ஆசிரியர்கள் கணிசமாக புகுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவர்களை களையெடுக்கும் தார்மீகக் கடமை தி.மு.க. அரசுக்கு உண்டு என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் கல்விக் கூடங்களில் இதுபோன்ற மதவெறி சம்பவங்கள் பரவலாக நடந்துள்ளதை நாம் சுட்டிக்காட்டி, அத்தகையவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். ஆனால் திராவிட மாடல் அரசு, குறைந்தபட்சம் அவர்களை தற்காலிக பணி இடைநீக்கம் கூட செய்யத் துணியவில்லை என்பதை வேதனையுடன் முதலமைச்சருக்கு தெரிவிக்கிறோம்.
காவிகள் மீது கடுமையான நடவடிக்கை பாய்ந்தால் மட்டுமே இது போன்ற மத வெறிப் போக்கை கல்வித் துறையில் துடைத்தெறிய முடியும் என்பதை முதல்வர் உணர வேண்டும்.
இனியும் அலட்சியம் செய்யாமல், துடியலூர் அரசுப் பள்ளியில் தலைதூக்கி இருக்கும் மதவெறியைக் கிள்ளி எறியும் வகையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், மதவெறி பிடித்த அந்த ஆசிரியர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச் செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments