தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) ன் 3வது மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாள்: 24/11/2024
இடம்: மதுரை
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)-ன் 3ஆவது மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
(1)இறைவனால் மன்னிக்கப்படாத குற்றமான "அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்" என்னும் ஷிர்க்-ல் இருந்தும், நபிகளாரின் வழிகாட்டுதல் இன்றி மார்க்கத்தில் மனோ இச்சைப்படி புகுத்தப்பட்ட பித்அத்களில் இருந்தும் முஸ்லிம் சமுதாயம் முற்றிலுமாக விலகி, "வஹி" மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையில் குர்ஆன்-ஹதீஸ் வழிகாட்டுதலின் படி தங்களுடைய வாழ்வியலை அமைத்துக் கொண்டு, இம்மை-மறுமையில் வெற்றி பெற வேண்டுமென அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறது NTF.
(2)நாதியற்று, நாடற்றுத் திரிந்த யூதர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் தந்த பலஸ்தீன் மக்களுக்குத் துரோகம் இழைத்து, அவர்களுடைய சொந்த மண்ணை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் மாபெரும் இனப்படுகொலையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஸியோனிஸ்டுகளையும், அவர்களுக்கு ஆயுதங்களும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கிறது NTF.
(3)அண்டை அரபு தேசங்களால் கைவிடப்பட்ட நிலையிலும், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, தாய்நாட்டை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் பலஸ்தீன் அரசுக்கும், அதன் படைவீரர்களுக்கும் பாராட்டுதலைத் தெரிவிப்பதோடு, அவர்களுடைய அளப்பரிய தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் எனவும், அநீதி இழைக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு முழுமையான வெற்றியும், நிம்மதியான வாழ்க்கையும் விரைவாகக் கிடைத்திட வேண்டுமென தவறாது பிரார்த்திக்க வேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது NTF.
(4)கண்முன்னே ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை காண சகிக்காமல், மனிதாபிமான அடிப்படையில்
அப்பாவி பலஸ்தீனுக்கு ஆதரவாக, ஆக்கிரப்பு இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் நிற்கும் இரான் அரசுக்கும், பிற போராளிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது NTF.
(5)பாசிச பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ள கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையே கேள்விக்குறி ஆகியுள்ள இத்தருணத்தில் "புல்டோசர் கலாச்சாரம்" என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதோடு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான விரும்பிய உணவு உண்ணும் உரிமை, விரும்பிய ஆடை அணியும் உரிமை, மதவழிபாட்டு உரிமை போன்ற அம்சங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகள் பாஜக அரசால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தியாவின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது NTF.
(6)இந்திய சுதந்திரத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று மிக, மிகப் பின்தங்கியுள்ளதை நீதிபதி சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை தரவுகளின் அடிப்படையில் நிறுவிய போதும், அந்த கமிட்டிகள் பரிந்துரைத்த இடஒதுக்கீடு இன்னும் வழங்கப்படாமல் இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறது.
எனவே கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களின் சதவிகிதத்துக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது NTF.
(7)அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமூகநீதியும், சமநீதியும் கிடைத்திட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் "வகுப்புவாரி இடஒதுக்கீடு" வழங்கிட வேண்டும் எனவும்; அனைத்து சமுதாயங்களும் அவரவருடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் பெற்றிட "விகிதாச்சார பிரதிநிதித்துவம்" வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது NTF.
(8)முஸ்லிம்களில் உள்ள தனவந்தர்கள் சமுதாய நலனுக்காக நன்மையை நாடி தானமாகத் தந்த வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் 'வக்ஃப் போர்டு' ஊழலுக்கு வழி வகுக்காமலும், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறது.
அதேவேளை, முஸ்லிம்களால் மட்டுமே பங்களிப்பு செய்யப்பட்டுள்ள வக்ஃப் சொத்துக்களை கபளீகரம் செய்யும் கள்ளத்தனமான உள்நோக்கத்தோடு இன்றைய பாசிச பாஜக ஒன்றிய அரசு கொண்டு வரும் 'வக்ஃப் திருத்த மசோதா"-வை வன்மையாகக் கண்டிப்பதோடு, எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது NTF.
(9)சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று "இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்பது.
மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப ஆட்சி அமைவதே மக்களாட்சித் தத்துவம்.
ஆனால், தற்போதைய பாஜக ஒன்றிய அரசு தனக்கு கைப்பாவையான ஒரு தேர்தல் கமிஷனை வைத்துக் கொண்டு, EVM என்னும் வாக்குச்சீட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடித்து வருகிறது. இதனால் தேர்தல் என்பதே ஒரு தேவையற்ற கேலிக்கூத்து ஆகிவிட்டது.
கடந்த காலத் தேர்தல்களில் நடைபெற்ற திருட்டுத்தனங்களை ஆதாரப்பூர்வமாக நீதிமன்றங்களில் சமர்ப்பித்தும் எந்தப் பலனும் இல்லை.
இந்நிலை தொடர்வது இந்திய ஜனநாயகத்திற்கு பேரழிவைத் தருவதோடு, நாடு சர்வாதிகாரப் பிடியில் சிக்கி மீள முடியாச் சீரழிவைச் சந்திக்க வேண்டி வரும்.
எனவே, EVM உடனடியாகத் தடை செய்யப்பட்டு வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்; அல்லது அனைத்து EVM இயந்திரங்களுடன் VVPAT இணைக்கப்பட்டு, EVM எண்ணிக்கையோடு VVPAT- ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையையும் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஐனநாயக மீட்புக்காக மாபெரும் மக்கள் இயக்கம் நாடெங்கும் தொடங்கப்பட வேண்டும். இரண்டாம் விடுதலைப் போராக இது அமையும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதற்காக களம் இறங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது NTF.
(10)கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு அடுத்த நடந்த பாராளுமன்றத் தேர்தல் என இரண்டிலும் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்று பெருவெற்றி பெற்ற திமுக அரசு, அதன் பிறகு முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தாமல் மெத்தனப்போக்கோடு செயல்படுவதைக் கவலையோடு சுட்டிக் காட்டுவதோடு, நீண்டகால சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது NTF.
No comments