மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் மனம் தளராமல் போராடிய காவலர் இபுராஹிம் ஆகியோருக்கு நன்றி!
பத்திரிகை அறிக்கை:
நாள் 13/07/24
மறுக்கப்பட்ட நீதியை நிலைநாட்டிய மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் மனம் தளராமல் போராடிய காவலர் இபுராஹிம் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டுகளும்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அறிக்கை!
மதச்சார்பற்ற இந்நாட்டில் நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது பறிக்கப்பட்டு முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படும் போது கூட நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறை பல சந்தர்பங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கே பாதகமாக தீர்ப்பு வழங்குவதையும், மதச்சார்பற்ற பல கட்சிகள் அதைக் கண்டு கொள்ளாமல் மௌனமாகக் கடந்து செல்வதையும் பார்த்து வந்திருக்கின்றோம்.
ஆனால், தற்போது மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு நீதமான தீர்ப்பு சமநீதியையும், மதச்சார்பின்மையையும் நிலைநாட்டி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகையில் தாடி வைத்த காரணத்திற்காக சம்பளவு உயர்வு மறுக்கப்பட்டதோடு, துறை ரீதியான நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டார்.
இந்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் சீக்கியர்கள் தாடி, தலைப்பாகை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
தமது மத அனுஷ்டானத்தைப் பின்பற்ற சீக்கியர்களுக்கு உள்ள உரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுவது அப்பட்டமான பாரபட்சம்.
இந்த அநீதிக்கு எதிராக அந்தக் காவலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தற்போது நீதமான தீர்ப்பு வழங்கப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளதை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வரவேற்கிறது.
‛‛காவல்துறையில் இஸ்லாமியர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம். பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு'' என கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றத்திற்கு முஸ்லிம்கள் சார்பாகவும், ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தினர் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக துணிச்சலாக சட்டப் போராட்டம் நடத்தி அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையை மீட்டெடுக்கும் உத்வேகத்தை ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு அளித்த காவலருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) தெரிவித்துக் கொள்கிறது.
இவண்,
M.நஜீர் அஹமது,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments