மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு - அரசியல் சாசனத்திற்கு அவமானம்! NTF கடும் கண்டனம்!
மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு - அரசியல் சாசனத்திற்கு அவமானம்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!
பல கட்டங்களாக தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் நிறைவுற்ற நிலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது.
இதில் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது பாசிச பாஜகவினருக்கே உரித்தான விதத்தில் விஷமத்தனமாகவும், மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு மற்றும் வெறுப்பைப் பரப்பி இந்துக்களை வெறியேற்றிடும் விதமாகவும் பேசி இருக்கிறார்.
அதில், "நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் சொல்கிறது.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
உங்களுடைய செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா? " என்று கடும் விஷத்தைக் கக்கி இருக்கிறார்.
மோடி பேசிய இந்த விஷயங்கள் அத்தனையுமே அப்பட்டமான பொய்.
"நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம்", என்று காங்கிரஸ் சொல்லவும் இல்லை. எந்தக் கட்சியினரும் இப்படி சொல்லவும் மாட்டார்கள்.
முஸ்லிம்கள் அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஊடுறுவல்காரர்கள் என்பதும் கடைந்தெடுத்த பொய்.
தனது பத்தாண்டு கால ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான உருப்படியான விஷயங்கள் எதுவுமே செய்யாத மோடி தனது தோல்வியையும், திறமையின்மையையும் மறைத்து மக்களை திசை திருப்ப இந்தக் கேவலமான அணுகுமுறையைக் கையில் எடுக்கிறார்.
மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்றும், பிரிவினைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் அரசியல் சாசனம் தெளிவாக வழிகாட்டி உள்ள நிலையில், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரம்தாழ்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் மோடியை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.
மட்டுமல்ல; தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் மோடி மற்றும் பாஜகவின் பிற தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்பட்டமாக ஆளும் பாஜகவின் ஒரு அணியைப் போலவே பாரபட்சமாக செயல்படும் தேசிய தேர்தல் ஆணையத்திற்கு NTF கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ள சுய அதிகார உரிமையின் படி நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்வதையும், தேர்தலி்ல் போட்டியிடுவதையும் தயவு தாட்சணியம் இன்றி தடை செய்து தேர்தல் ஆணையம் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்ட வேண்டும்.
ஏற்கனவே, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அதிகார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தின் மீது வன்மத்தைக் கக்கும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினரையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புக் கேட்டுக் கொள்கிறது.
இவண்,
M.நஸீர் அஹமது,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments