இஸ்ரேல் - ஃபலஸ்தீன் விவகாரம்: இந்தியர்களின் மனசாட்சியைக் கொன்ற மோடி அரசு! NTF கண்டனம்!!
28/10/2023
#stand_with_palestinian
#Israel #Palestine #Gaza
#Cease_fire #India_stand
#UN_Resolution_on_Israel
இஸ்ரேல் - ஃபலஸ்தீன் விவகாரம்:
இந்தியர்களின் மனசாட்சியைக் கொன்ற மோடி அரசு!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கண்டனம்!!
NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை..!
இஸ்ரேல் - ஃபலஸ்தீன் இடையே நடந்து வரும் போரினால் காஸாவில் கடந்த 20 நாட்களாக ஏற்பட்ட பேரிழப்பையும், துயரங்களையும் கண்டு கண்ணீர் வடிக்காத மனிதர்கள் இருக்கமுடியாது.
மனித குல அழிவிற்கான இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; பச்சிளங் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், ஊனமுற்றோர் என அப்பாவி மக்களின் உயிர்ப்பலியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, நேற்று (அக்.27) ஐ.நா.பொது மன்றத்தின் 10வது அவசரகால சிறப்பு அமர்வு, அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜோர்டான் நாடு, போர் நிறுத்தம் குறித்த ஒரு வரைவுத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
அந்தத் தீர்மானம், இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தால் காஸாவில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு வரும் அப்பாவி ஃபலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை தடுப்பதற்கும்,
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்ற போராளிக் குழுக்களின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பதற்கும்,
இஸ்ரேல் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்கான மருத்துவமனைகளிலும், ஏனைய மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமல் உயிருக்குப் போராடும் அப்பாவி மக்களைக் காப்பாற்றவும்,
காஸா மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், மருந்துப்பொருட்கள், மின்சாரம், கேஸ், பெட்ரோல், டீஸல் போன்ற அனைத்தையும் மனித நேயம் இல்லாமல் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்கு எதிராக, மனிதாபிமான உதவிகள் அம்மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகக் கொண்டு வரப்பட்டது.
ஜோர்டான் முன்வைத்த இந்தத் தீர்மானத்திற்கு,195 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், இஸ்ரேலுக்கு ஆதரவான 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற இஸ்ரேல் ஆதரவு நாடுகள் உட்பட 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இதில் இந்தியர்களாகிய நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் பங்களிக்காமல், மறைமுகமாக போர் நிறுத்தத்தை எதிர்த்து, இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்திற்கும், சர்வதேச சட்டத்தின் பார்வையில், போர்க் குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு மறைமுகமாக ஆதரவாகவும் நடந்து கொண்ட 45 நாடுகளில் இந்தியாவும் இருந்துள்ளது என்பதுதான் வேதனையான விஷயம்.
இஸ்ரேல் - ஃபலஸ்தீன் சம்பந்தமாக காந்திஜி, ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் பட்டேல் காலம் முதற்கொண்டு வாஜ்பேய், மன்மோகன் சிங் காலம் வரை இந்தியா கடைபிடித்து வந்த ஃபலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டிற்கு முற்றிலும் விரோதமாகவும், வினோதமாகவும் உள்ளது. இது இந்தியாவின் அணி சாரா கொள்கைக்கு முற்றிலும் முரணானது. அப்பட்டமான அமெரிக்க ஆதரவுப் போக்கு.
போர் நிறுத்தப்பட வேண்டும்; அப்பாவி உயிர்கள் பலியாவது நிறுத்தப்பட வேண்டும்; வாழ்வாதார பேரழிவுகள் தடுக்கப்பட வேண்டும்; மிருகத்தனமான செயல்களால் செத்து மடிந்தும், நடைப் பிணங்களாக செத்துப் பிழைத்தும் நிர்க்கதியாய் தவிக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் இந்திய மக்கள் எவருக்குமே இரு வேறு கருத்து இருக்க முடியாது. ஈவு இரக்கமற்ற இரும்பு இதயங்களை இந்தியர்கள் கொண்டிருக்கவில்லை.
ஃபலஸ்தீன் - இஸ்ரேல் போர் விவகாரத்தில்,140 கோடி இந்தியர்களின் மனிதாபிமான உணர்வுகளை ஊனப்படுத்தும் வகையில் மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு நடந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். மறைமுகமான இஸ்ரேல் - அமெரிக்க ஆதரவு போக்கு இந்தியாவை அழிவுக்குக் கொண்டு போய் விடும் என்பதை இந்திய ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்,
பொதுச் செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments