முக்கிய அறிவிப்புகள்

காஸா மருத்துவமனை மீதான தாக்குதல்: மனித குல விரோதி இஸ்ரேலின் வெறிச்செயலுக்கு போர்க் குற்ற நடவடிக்கை வேண்டும்! NTF கடும் கண்டனம்!

#stand_with_palestinian #Israel #GazaAttack #WarCrimes

18/10/2023

காஸா மருத்துவமனை மீதான தாக்குதல்:

மனித குல விரோதி இஸ்ரேலின் வெறிச்செயலுக்கு போர்க் குற்ற நடவடிக்கை வேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!

NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:

ஹமாஸ் போராளிகளையும், அதன் தளங்களையும் அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, காஸாவில் அப்பாவி பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொத்துக் கொத்தாக கொன்று இனஅழிப்பு செய்து வருகிறது.

சர்வதேச சட்டங்களுக்கும், போர் தர்மங்களுக்கும், மனித உரிமைகளுக்கும், ஐ.நா.வின் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கும் முற்றிலும் எதிராக இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடூரங்கள் உலகையே உலுக்கி வருகிறது.

நேற்று இரவு காஸாவில் உள்ள அல்- அஹ்லி அரபு ஆங்கிலிகன் மருத்துவமனையை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன.

ஐநூறுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானதாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலியானவர்களில் 65 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற தகவல் நெஞ்சையே பதறச் செய்கிறது.

மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் போன்ற சில குறிப்பிட்ட இடங்கள் போர்க்காலங்களில் அபயமளிக்கும் இடங்கள் என்பதால், குண்டு வீச்சுக்குப் பயந்து அப்பாவி மக்கள் அந்த மருத்துவமனைக்குள் தஞ்சம் அடைந்திருந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்தவர்களையும் இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த மிருகவெறி பிடித்தச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மிகவும் கடுமையாக கண்டிக்கிறது.

கோழைத்தனமான இந்தச் செயலுக்கு எதிராக  மிக வன்மையாக ஐ.நா. அரபு நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

குறிப்பாக, ஜெரூசலம் மற்றும் மத்திய கிழக்கிற்கான கிறிஸ்தவ ஆயர்கள் திருச்சபையும் இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது.

கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிலவரங்களை உற்று நோக்கி வருபவர்களும், கடந்த கால இஸ்ரேலின் இனப் படுகொலை வரலாற்றை அறிந்தவர்களும், காஸா மருத்துவமனை மீதான இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்தத் தாக்குதலை ஹமாஸும், இஸ்லாமிய ஜிஹாதிகளும் நடத்தியதாக அப்பட்டமான பொய்யை தமது ஊடக வலிமையை பயன்படுத்தி பரப்பி வருகின்றன.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான பிரிட்டனும், அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அவசரப்பட்டு எந்தக் கருத்தும் வெளியிடக்கூடாது. நிதானமாக செயலாற்ற வேண்டும். நிலைமையை ஆராய்ந்து உண்மையை உறுதி செய்த பிறகே யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று பிரிட்டன் கூறுகிறது. ஆனால் அமெரிக்க அதிபரோ, வெடி விபத்து என்றும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அறிக்கை வெளியிடுகிறார். அதன் பின்னர், இது ஹமாஸின் செயல் என்று இஸ்ரேல் எடுத்த வாந்தியை ஜோ பைடனும் எடுக்கிறார்.

ஜோ பைடன் கூறியபடி வெடி விபத்து என்பதும், ஹமாஸின் செயல் என்றும் பிரிட்டனுக்கு தெரியாமல் போனது ஏன்? இது இஸ்ரேலின் செயல்தான் என்பதை புரிந்து கொண்ட பிரிட்டன், அவசரப்பட்டு எதையும் சொல்லி விட்டு, ஜோ பைடன் போல குட்டு வாங்குவதைத் தவிர்க்கவே பிரிட்டன் உஷாரானதாக கருத முடிகிறது.

பாலஸ்தீனத்திற்கான ஐ.நா.வின் தூதர் ரியாத் மன்சூர், மருத்துவமனை தாக்குதல் குறித்து இன்று ஐ.நா.வில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்த கருத்துகள், இஸ்ரேலின் பொய் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

"இஸ்ரேல் இராணுவத்தின் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் தனது X (டுவிட்டர்) பக்கத்தில், "அல் அஹ்லி மருத்துவமனையைச் சுற்றித்தான் ஹமாஸின் நிலைகள் இருந்தன. அதைக் குறிவைத்துத் தாக்கும் போது, தவறுதலாக மருத்துவமனை மீது குண்டுகள் விழுந்தன." என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் உடனே அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. அதற்கு ஆதாரமான ஸ்கிரீன் ஷாட் என்னிடம் உள்ளது. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். இஸ்ரேல் குண்டு வீசி தாக்கிவிட்டு அநியாயமாக பாலஸ்தீனர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறது. " என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது,"இஸ்ரேல் இராணுவத்தின் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனைகளை காலி செய்யும்படி வலியுறுத்தியதோடு, மருத்துவமனைகளை நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்று கூறி, ஒரு மருத்துவமனை தாக்கப்பட்டும் உள்ளது. எனவே அவர்களின் நோக்கம், மருத்துவமனைகள் காலி செய்யப்பட வேண்டும் அல்லது தாக்கப்பட வேண்டும் என்பதே! எனவே இந்தக் குற்றச் செயலுக்கு இஸ்ரேல் இராணுவம் தான் முழுப்பொறுப்பு. பாலஸ்தீனர்கள் மீது கட்டுக்கதைகளை புனைவதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று மிகக் கடுமையாக கூறியுள்ளார்.

ரியாத் மன்சூரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தப் பதிலுமில்லை.

ரியாத் மன்சூரின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அந்த மருத்துவமனையின் இயக்குனர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையை உடனே காலி செய்யும்படியும், காலி செய்யாவிட்டால் குண்டு வீசி தாக்குவோம் என்று எச்சரித்தனர்." என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மருத்துவமனை தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், காஸாவின் மீது 200 போர் விமானங்கள் வட்டமடித்தன என்று ஈரான் கூறியுள்ளது. 200 இஸ்ரேலிய போர் விமானங்கள், காஸாவிலுள்ள மருத்துவமனைகள் மீது மலர் தூவுவதற்கா பறந்தன?

இஸ்ரேல் - பாலஸ்தீன பகுதியில் உள்ள ஜெரூசலேமிருந்து கிறிஸ்தவ ஆயர்கள் திருச்சபை இன்று வெளியிட்ட கண்டன அறிக்கை, "காஸா நகரின் மையப்பகுதியில் உள்ள எங்களின் அல்- அஹ்லி ஆங்கிலிகன் மருத்துவமனை, "கொடூரமாக இஸ்ரேலிய வான்வெளி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது." என்று தெளிவாக குறிப்பிடுகிறது.

"நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், சர்வதேச மனிதாபிமான கொள்கைச் சட்டத்திற்கும், சர்வதேச மருத்துவமனை பாதுகாப்பு விதிகளுக்கும் எதிரானது." என அந்த அறிக்கை கடுமையாக கண்டிக்கிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் கிறிஸ்தவர்கள் கூட, இந்தக் கொடுஞ்செயலை இஸ்ரேலிய இராணுவம் தான் செய்தது என்று தங்களின் மனசாட்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் உலக அரங்கில் இஸ்ரேலுக்கும் அதைத் தாங்கிப் பிடிக்கும் அமெரிக்காவுக்கும் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால், இந்தக் கேவலத்தை மறைக்க, "ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலுக்கு ஏவிய ஏவுகணை தான் குறி தவறி மருத்துவமனையில் விழுந்துள்ளது" என்ற பொய்யை இஸ்ரேல் பரப்பி வருவதோடு, இஸ்ரேலுக்கு சம்பந்தமில்லை என்று உலகை நம்ப வைப்பதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, "40 குழந்தைகளை ஹமாஸ் போராளிகள் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள்" என்று போலி வீடியோ ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டது. அதை உண்மையென நம்பிய ஜோ பைடன் வாஷிங்டன் செய்தியாளர்களிடம் ஹமா ஸை கண்டித்துப் பேசினார். பின்னர் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அது பொய்யான வீடியோ என்று திருத்தம் கூறி பைடனின் அரைவேக்காட்டுத்தனத்தை அம்பலப்படுத்தினார். அதே சம்பவம் தான் இப்போது மருத்துவமனை தாக்குதல் விஷயத்திலும் நடந்துள்ளது.

இஸ்ரேலின் வாதப்படி, மருத்துவமனையை சுற்றிலும் தளம் அமைத்துள்ள ஹமாஸ் ஏவும் ஏவுகணை என்பது சாதாரண கையெறி குண்டா கை தவறி அருகிலேயே விழுவதற்கு? அல்லது இஸ்ரேலை நோக்கியோ அல்லது அதன் போர் விமானங்களை குறிவைத்தோ ஏவப்பட்ட ராக்கெட் நேராக பாயுமா அல்லது பின்புறமாக (Reverse ல்) பாய்ந்து மருத்துவமனையைத் தாக்குமா? என்ற கேள்வி எழுகிறது. 

அத்துடன், இஸ்ரேல் ஆதாரமாக வெளியிட்ட வீடியோவும் போலியானது என்பதும் அம்பலமாகியுள்ளது. ஜாக்ஸன் ஹின்கல் என்னும் அமெரிக்க பத்திரிகையாளர், "இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட வீடியோ உண்மையானது அல்ல; அது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி எடுக்கப்பட்ட பழைய வீடியோ" என்று தனது X (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் அயோக்கியத்தனங்களையும் அவர் புட்டு புட்டு வைக்கிறார்.

மேலும், காஸா மீது இஸ்ரேல் வீசி வரும் ஏவுகணைகள் 950 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் MK 84 வகையைச் சேர்ந்த JDMA ஏவுகணைகள். இதன் சத்தமும், மருத்துவமனையில் விழுந்த ஏவுகணையின் சத்தமும் ஒன்றாக இருக்கின்ற ஆடியோவும் வெளியாகியுள்ளதாக தெரிகிறது.

JDMA ஏவுகணைகளோ அல்லது அதை வீழ்த்தும் அளவுக்கு சக்தி மிக்க ஏவுகணைகளோ ஹமாஸிடம் கிடையாது என்ற தகவலும், காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்துள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கா - இஸ்ரேலின் எலும்புத் துண்டுக்கு அலையும் சில மேற்கத்திய ஊடகங்கள் வழக்கம் போலவே பொய்களை பரப்பிக் கொண்டிருக்கும்.

இஸ்ரேலின் இந்தக் கொடூரங்களுக்கு எதிராக ஆசிய நாடுகளில் மட்டுமின்றி இஸ்ரேலின் கூட்டாளிகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்று மக்கள் வீதியில் இறங்கி கடுமையாக ஆர்ப்பரித்துள்ளதை பார்க்கும் போது, உலக மக்களின் கோபத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆளாகி இருப்பதை உணர முடிகிறது.

அப்பட்டமான போர்க்குற்றத்தை அரங்கேற்றிவிட்டு, பழியை போராளிக் குழுக்கள் மீது சுமத்தும் இஸ்ரேலின் கீழ்த்தரமான செயலையும், அதை ஆதரிக்கும் அமெரிக்காவின் அடாவடிப் போக்கையும் மனிதாபிமானமுள்ள எவருமே ஏற்க முடியாது.

இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதோடு, லெபனான்,ஜோர்டான், சிரியா, எகிப்து போன்ற இஸ்ரேலின் அண்டை நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச வந்த அமெரிக்க அதிபரை எந்தத் தலைவர்களும் சந்திக்க மறுத்து ஜோ பைடன் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்கள். இது அமெரிக்க அதிபரின் முஸ்லிம் விரோதப்போக்கின் மீது விழுந்த பேரிடியாகும்.

மருத்துவமனை மீதான ஏவுகணை தாக்குதல் என்பது அப்பட்டமான போர்க் குற்றம் என்பதால், இஸ்ரேல் மீது போர்க்குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் மேலும் அப்பாவி மக்கள் பலியாகாமல் இருக்க, உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நியாயமான பேச்சுவார்த்தை மூலம் சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பம். இதை நிறைவேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.


இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments