ஹரியானாவில் இனக்கலவரம்! பாஜக ஆளும் மாநிலங்கள் பற்றி எரிகின்றன!! NTF கடும் கண்டனம்!
பத்திரிகை அறிக்கை:
01/08/2023.
ஹரியானா - முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்!
மணிப்பூரைத் தொடர்ந்து
ஹரியானாவில் இனக்கலவரம்!
பாஜக ஆளும் மாநிலங்கள் பற்றி எரிகின்றன!!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் ஒன்று ஆளும் தரப்பின் ஆதரவோடு திட்டமிட்டு தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜுனைத் மற்றும் நாஸர் என்ற முஸ்லிம் இளைஞர்கள் கடத்தி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நூஹ் பகுதியில் வாரிஸ்கான் என்ற 22 வயது வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், 20 வயது இஸ்லாமிய இளைஞர் மொஹீன் கான் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான பல கொலைகளில் நேரடியாக ஈடுபட்டும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பயங்கரவாத பஜ்ரங்தள் நிர்வாகியான மோனு மனேசர் என்ற இந்துத்துவ பயங்கரவாதிதான், பிட்டு பஜ்ரங்கி என்ற தனது சக பஜ்ரங்தள் நிர்வாகியோடு சேர்ந்து ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு மீண்டும் துணிச்சலாக இக்கலவரத்தை தொடங்கியுள்ளான்.
ஒரு இனக்கலவரத்தை தொடங்க வேண்டும் என்ற சதித் திட்டத்தோடு VHP மற்றும் பஜ்ரங்தள் இணைந்து முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஊர்வலத்தை நடத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே பல முஸ்லிம்களை கொலை செய்துள்ள பயங்கரவாதி என தெரிந்தும் முஸ்லிம்களின் பகுதிக்குள் ஊர்வலம் நடத்த மோனு மனேசருக்கு காவல்துறை அனுமதி வழங்கியதன் மூலம் அதிகார வர்க்கத்தின் ஆசியோடுதான் இந்த இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ஒருபுறம் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தாக்கி, அவர்களுடைய வீடு, கடைகள், வாகனங்களை நொறுக்கி தீவைத்துக் கொண்டிருக்கும் போது, மறுபுறம் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இடையில் புகுந்து "ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் கோயிலுக்குள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும்" வதந்'தீ'யைப் பற்ற வைத்து கலவரம் மேலும் பல பகுதிகளுக்குப் பரவ தூபமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குர்கிராம், பரீதாபாத், நூஹ் ஆகிய பகுதிகளில் கலவரம் கொளுந்து விட்டு எரிகிறது.
முஸ்லிம்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் அதேவேளை, ஆளும் தரப்பு தனக்கு ஆதரவாக உள்ள தைரியத்தில் காவல்துறை மீதும் இந்துத்துவ பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது இரண்டு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.
திட்டமிட்டு நடத்தப்படும் இந்த இனக்கலவரத்தை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே, இரு தினங்களுக்கு முன்பு RPF என்னும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளாகப் பணி புரிந்து கொண்டிருக்கும் சேத்தன் குமார் சௌத்ரி என்ற மதவெறியன் ஜெய்ப்பூர் - மும்பை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அப்துல் காதர், முஹம்மது ஹுஸைன் மற்றும் அஸ்கர் அலி ஆகிய அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற கொடிய செயலால் நாடே விக்கித்துப் போயுள்ள நிலையில், அடுத்தடுத்து முஸ்லிம்களைக் குறி வைத்து கொடும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இதுபோன்ற மதவெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பாதிக்கப்பட்டு வரும் முஸ்லிம்களின் நியாயத்திற்காக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என NTF வேண்டுகோள் வைக்கிறது.
மேலும், ஆளும் தரப்பாக அனைத்து மட்டங்களிலும் படுதோல்வி அடைந்துள்ள பாஜக மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய தோல்விகளை மறைக்கும் விதமாகவும், அடுத்தடுத்து தேர்தல்கள் வர இருக்கின்ற நிலையில், இந்துத்துவ வெறியைத் தவிர மக்களிடம் முன்வைக்க தங்களிடம் உருப்படியான எந்த திட்டங்களும் இல்லாத நிலையில், தேர்தல்களில் வாக்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற அற்ப அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற இனக்கலவரங்களையும், மதக்கலவரங்களையும் தொடர்ந்து நடத்தும் அபாயம் உள்ளது.
மணிப்பூர், ரயில் துப்பாக்கி சூடு, ஹரியானா ஆகிய தொடர் வன்முறைகள் இதை நோக்கித்தான் செல்கின்றன.
குறுகிய அரசியல் லாபத்திற்காக ஆளும் வர்க்கமே அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதால், உச்சநீதிமன்றம் இவற்றை கவனத்தில் கொண்டு, சட்ட ஒழுங்கை நிலைநாட்டி நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் பொறுப்பை தானே முன் வந்து கையில் எடுத்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவண்:
A.S.அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments