மனிதம் மரணித்து விட்டதா மணிப்பூரில்? NTF கண்டன அறிக்கை!
பத்திரிகை அறிக்கை:
20/07/2023
மனிதம் மரணித்து விட்டதா மணிப்பூரில்?
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கண்டன அறிக்கை!
இயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மே மாதம் முதல் வன்முறைத் தீயால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.
அங்கு மலைப் பிரதேசங்களில் குக்கி மற்றும் நாகா இன பழங்குடினர் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள்.
அதேவேளை, பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்து மதத்தைப் பின்பற்றும் மெய்தி இன மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர்.
பிற சமுதாய மக்களை விட மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், அவர்களுக்கான சில வளர்ச்சி திட்டங்களும், சிறப்பு சலுகைகளும் பல காலமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், மெய்தி இன இந்துக்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவ்வாறு வழங்கும் பட்சத்தில் தங்களுடைய முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பதால், இதை பழங்குடி இன கிறிஸ்தவ மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இங்கேதான் மக்களை பிரித்தாளும் பாசிச பாஜகவின் சித்து விளையாட்டு ஆரம்பமானது.
மணிப்பூரில் தற்போது முதலமைச்சர் பீரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
பழங்குடி கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக மெய்தி இன இந்து மக்களை பாஜக தூண்டி விட்டது. இரு இனக் குழுக்களுக்கும் இடையில் பற்றிய பகைமைத் தீயை மேலும் ஊதிப் பெரிதாக்கியது.
தற்போது மத்தியிலும், மணிப்பூரிலும் ஆட்சியிலிருக்கும் பாஜக தங்களுக்கு ஆதரவளிப்பதால் ஊக்கமடைந்த மெய்தி இன வன்முறையாளர்கள், பழங்குடி மக்களுக்கெதிரான முழு அளவிலான இனக் கலவரத்தை முன்னெடுத்தனர்.
இந்த இனக் கலவரத்தில் நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு, ஏராளமான வீடுகள், கடைகள், நிறுவனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் பல்லாயிரக் கணக்கான பழங்குடி மக்கள் உயிர் பிழைப்பதற்காக காடுகளுக்குள் ஓடி ஒளியும் துயரமான நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறையின் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 4ஆம் தேதி காங்போக்பி மாவட்டம் பைனோம் என்ற பழங்குடி கிராமத்தில் நுழைந்த 800 முதல் 1000 பேர் அடங்கிய மெய்தி இன வன்முறைக் கும்பல் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, அக்குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றதோடு, அவர்களை பகிரங்கமாக கூட்டு பலாத்காரம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சகோதரிகள் மானபங்கப்படுத்தப்படுவதை தடுத்த அப்பெண்களின் சகோதரர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மிருகத்தனமான இந்த ஈனச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆளும் பாசிச பாஜகவின் ஆசியால் மணிப்பூரில் கட்டுக்கடங்காத இனக் கலவரம் நடந்து வருவதை ஏற்கனவே நாடே கண்டித்து வருகின்ற அதேவேளை, பிரதமர் மோடியின் கள்ள மௌனமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாராமுகமும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
ஏதாவது சாக்குப்போக்கை வைத்து சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் மீது கலவரத்தை ஏவி விடுவதும், கலவரங்களை காரணமாக வைத்து பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதையும், கூட்டுப் பலாத்காரம் செய்வதையும் தங்களுடைய கலாச்சாரமாகவே வைத்திருக்கின்றனர் இந்துத்துவ வெறியர்கள்.
அதேபோல், அத்தகைய பாலியல் குற்றவாளிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து பரிசும், பதவியும் தருவதை பாஜக தனது பாரம்பரியமாக வரித்துக் கொண்டுள்ளது.
ஆளும் தரப்பே கலவரக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளதால், உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு மணிப்பூர் சம்பவத்தில் ஈடுபட்ட மனித உருவிலுள்ள மிருகங்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். தகுந்த விசாரணைக்குப் பிறகு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனவும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அதேபோல், மணிப்பூரில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயலிழந்து, கலவரம் கட்டுக்கடங்காமல் செல்வதால் அம்மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேட்டுக் கொள்கிறது.
இவண்,
A.S.அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments