முக்கிய அறிவிப்புகள்

பறிபோன பத்திரிகை சுதந்திரம்! சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் இந்தியா!! ஜனநாயகம் காக்க NTF அழைப்பு!!!

பத்திரிகை அறிக்கை:

04/05/2023.

பறிபோன பத்திரிகை சுதந்திரம்!

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் இந்தியா!!

ஜனநாயகம் காக்க காலதாமதம் இன்றி களம் காண தேசபக்தர்களுக்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அழைப்பு!!!

அளப்பரிய தியாகங்கள் பல செய்து அந்நிய ஆங்கிலேயனிடமிருந்து போராடி சுதந்திரம் பெற்ற நாம் அதன் மூலம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை ஆனோம். விலை மதிப்பில்லா பல உயிர்களை விலையாகக் கொடுத்துப்  போராடிய விடுதலைப் போராட்டத்தின் மூலம் நாம் அடைந்த வெற்றிகளில் தலையாய வெற்றி நமக்கான அடிப்படை உரிமைகளை வென்றெடுத்ததாகும்.

ஒரு நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது என்பதற்கும், மக்களாட்சித் தத்துவம் கடைபிடிக்கப்படுகிறது என்பதற்குமான அடிப்படை அடையாளமே வெளிப்படையான நிர்வாகம், நேர்மையான தேர்தல், சுய அதிகாரம் கொண்ட நீதி பரிபாலனம், சுதந்திரமான ஊடகங்கள் ஆகியவையே.

நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்த அம்சங்கள் பெரும்பாலும் சரியான திசையிலேயே சென்று கொண்டு இருந்தன.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு அமைந்ததில் இருந்தே ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு, மறைமுகமாக சர்வாதிகார போக்கு தலை தூக்கத் தொடங்கியது.

இது பற்றி நாட்டின் நலன் நாடும் நடுநிலையாளர்கள் அவ்வப்போது கவலை வெளியிட்டு, கண்டனம் தெரிவித்து வந்தாலும், மதவெறிப் பேச்சுக்கள், இனக்கலவரங்கள், தனிநபர் தாக்குதல் அல்லது தனிநபர் துதிபாடல் மூலம் மக்கள் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு விடுகிறார்கள்.

பெரும்பான்மை மதவாதத்தின் மூலம் தங்களுடைய சர்வாதிகாரப்போக்கை திரையிட்டு மறைத்துவிடலாம், மக்களை மடை மாற்றிவிடலாம்  என மமதையில் இருக்கும் மோடியின் பாசிச அரசுக்கு, தங்களை சர்வதேச உலகம் கண்காணிக்கிறது என்பதும், அது உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு பெருத்த அவமானத்தை கொண்டு வரும் என்பதும் அறிவில் புலப்படாமல் போனது.

அந்த வகையில் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச பத்திரிகையாளர் தினத்தையொட்டி REPORTERS WITHOUT BORDERS (எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள்) என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் சர்வதேச அளவில் “ஊடக சுதந்திரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை” வெளியிட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை REPORTERS WITHOUT BORDERS அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நார்வே முதல் இடம், அயர்லாந்து 2ஆம் இடம், டென்மார்க் 3ஆம் இடம், ஸ்வீடன் 4ஆம் இடம், பின்லாந்து 5ஆம் இடம் பெற்றுள்ளன. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் மன்னராட்சி நடக்கும் பூட்டான் 90ஆவது இடமும், அரசியல் ஸ்திரமற்ற நேபாளம் 95ஆவது இடமும், அவ்வப்போது ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கும் மாலத்தீவு 100ஆவது இடமும், பௌத்த பெரும்பான்மை தீவிரவாத நாடான இலங்கை 136ஆவது இடமும், ஆட்சியில் ரணுவத்தின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதாக நம்பப்படும் பாகிஸ்தான் 150ஆவது இடமும், பயங்கரவாதிகளின் புகலிடம் என முத்திரை குத்தப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் 152ஆவது இடமும் பெற்றுள்ள நிலையில், “ஜனநாயகதின் முன்னோடி” என்ற பெருமையோடு இருந்த இந்தியா, மோடியின் கேடுகெட்ட நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 161ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு கேவலமான நிலையை அடைந்துள்ளது.

(1)ஊடகங்களை சுயமாக செயல்படவிடாமல் அரசியல் ரீதியாக நிர்பந்திப்பது.

(2)செய்திகளுக்கான கட்டுப்பாடு, செய்தியாளர்களை சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதிப்பது, பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது/தண்டிப்பது.

(3)செய்தி நிறுவனங்களை தொடங்குவது மற்றும் நிர்வகிப்பதில் ஏற்படும் நெருக்கடிகளும், இடர்பாடுகளும்.

(4)பத்திரிகை வெளியீடுகளை பால் சார்ந்து, இனம் சார்ந்து, மதம் சார்ந்து கையாளுதல் மற்றும் ஆளும் தரப்பையும், அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்களையும் கேள்வி கேட்பதிலிருந்து தவிர்க்க நிர்பந்திப்பது.

(5)உடல்ரீதியான தாக்குதல், உளவியல் தாக்குதல் அல்லது தொழில் ரீதியிலான அழுத்தம் போன்ற எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் ஊடகங்கள் செய்திகளை சேகரித்து வெளியிடும் சூழல்

ஆகிய 5 குறியீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட தரவரிசையில்தான் இந்தியா தரை மட்ட அளவுக்கு தரம் தாழ்ந்து போயுள்ளது.

சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் எடுத்துக் கொண்ட 5 அளவுக்குறியீடுகள் (Indicators)உடன் கூடுதலாக 6-ஆவதாக ஒரு அம்சமும் இந்தியாவில் நிலவுகிறது. அதாவது, நியாய உணர்வோடு அரசினுடைய தவறுகளை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் ஊடகவியாளர்கள் மீது அரசு தரப்பில் தரப்படும் நெருக்கடிகள் போக கூடுதலாக, தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நீதித்துறையை ஏவி விட்டு  தேச துரோக வழக்கு / பயங்கரவாத தடுப்பு சட்ட வழக்கு  உட்பட பல பொய் வழக்குகளைப் போடுவது, ஜாமீன் தர மறுத்து சித்தரவதை செய்வது போன்ற அநியாயமும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தையும் இனிவருங்காலத்தில்  சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவது /  தன்வயப்படுத்துவது (அதானி மூலம் NDTVஐ கையகப்படுத்தியது), அரசின் தவறுகளை பொதுவெளியில் விவாதிக்கும் பத்திரிகையாளர்களைக் கொல்வது (கௌரிலங்கேஷ்), மானநஷ்ட வழக்கு தொடர்வது, தேசதுரோக வழக்குப் போட்டு சித்திரவதை செய்வது (சித்தீக் காப்பன்) போன்ற அவலங்கள்தான் இந்த இழிநிலைக்கு காரணம். 

இந்நிலை தொடர்வது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து சர்வாதிகார பாஜக ஆட்சியை அகற்றிட ஒற்றுமையுடன் களம் காண வேண்டும் எனவும், மக்களாட்சி மலரும் வகையில் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் எனவும் தேசபக்தர்கள் அனைவருக்கும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அழைப்பு விடுக்கிறது.

இவண்,

A.S.அலாவுதீன்,

பொதுச்செயளாலர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments