கொலைக்களமான உத்தரப்பிரதேசம்! ஆதித்யநாத் ஆட்சியில் கிரிமினல்களின் ஆதிக்கம்!! NTF கடும் கண்டனம்!!!
பத்திரிகை அறிக்கை:
16/04/2023.கொலைக்களமான உத்தரப்பிரதேசம்!
ஆதித்யநாத் ஆட்சியில் கிரிமினல்களின் ஆதிக்கம்!!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!!!
சட்ட ஒழுங்கு சீர்குலைவு - அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் - ரவுடி ராஜ்ஜியம் என ஒட்டுமொத்தமாக மோசமான நிர்வாகம் என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம்.
அந்த அளவு தினம்தினம் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, கும்பல் படுகொலை, போலி என்கவுண்டர் என ஏதாவதொரு வகையில் ரத்தக்களரியாகும் மாநிலம் அது.
இந்தியாவிற்கே முன்மாதிரியான ராமராஜ்ஜியம் நடக்கும் மாநிலம் உ.பி என்று பாசிச பாஜக பெருமை பேசினாலும், பிரதமர் மோடி M.Pஆக இருக்கும் தொகுதி அடங்கிய மாநிலம் என்றாலும் கூட, சட்ட ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கேவலமான நிலையில்தான் அங்கே காட்டாட்சி நடந்து வருகிறது என்பது அன்றாட நாட்டு நிகழ்வைக் கவனிக்கும் அனைவரும் அறிந்த உண்மை.
அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான எல்லாக் குற்றச் செயல்களும் அங்கே தங்கு தடையின்றி அம்மாநில அரசின் மூலமாகவோ அல்லது ஆளும் வர்க்கத்தின் ஆசி பெற்ற குண்டர்களின் மூலமாகவோ வெளிப்படையாகவே நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் கொண்ட ஆதித்யநாத் அங்கே முதலமைச்சராக இருப்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
அந்த வகையில், முஸ்லிம்கள் நோன்பிருந்து வரும் இந்த புனித ரமலான் மாதத்தில் தனது வீட்டில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்த அயோக்கிய ஆதித்யநாத் ஆட்சியில் இப்போது ஒரு முஸ்லிம் அரசியல்வாதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
5 முறை M.L.A-வாகவும், ஒரு முறை M.P-யாகவும் இருந்த அதிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அஹமது ஆகியோர் உ.பி போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், ஊடகவியலாளர்களின் கண்ணெதிரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு குஜராத் - அஹமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அஹமது ஆகியோரை போலீஸார் கொண்டு வந்து உ.பி - பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் மார்ச் 26ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.
அவ்வழக்கில் மார்ச் 28 அன்று அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தமக்கும் அவ்வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தமது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் பதிந்து உ.பி போலீஸார் பழிவாங்குவதாகவும், தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல சதி செய்வதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகி இருந்தார் அதிக் அஹமது.
இந்நிலையில், நேற்று (15/04/23 சனிக்கிழமை) இரவு அஹமது சகோதரர்கள் கைவிலங்கு இடப்பட்ட நிலையில், போலீஸார் சுற்றிலும் நின்று மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அதிக் அஹமது பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, பத்திரிகையாளர்களுக்கு இடையில் இருந்து திடீரென ஒருவன் கைத்துப்பாக்கியால் அதிக் அஹமது மற்றும் அஷ்ரஃப் அஹமது ஆகியோரின் தலையில் சரமாரியாக சுட்டதில் அவ்விருவரும் அங்கேயே இரத்த வெள்ளத்தில் பிணம் ஆகினர்.
சுற்றிலும் போலீஸார் நின்றிருக்க, ஊடகங்களின் கேமராக்கள் நேரடியாக படம் பிடித்துக் கொண்டிருக்க துணிச்சலாக ஜெய் ஸ்ரீராம் கோஷம் இட்டபடி கொலைகாரர்கள் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்றால், இது ஆதித்யநாத் அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட படுகொலை என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு அதிக் அஹமதுவின் மகன் ஆஸாத் உ.பி போலீஸாரால் ஜான்ஸி என்ற இடத்தில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அஹமது சகோதரர்களையும் போலி என்கவுண்டரில் கொலை செய்ய உ.பி போலீஸ் திட்டமிட்டு இருக்கலாம்; அதேநேரம் அதிக் அஹமது தன்னை என்கவுண்டர் செய்ய சதி நடக்கிறது என பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியதால், உ.பி அரசு நேரடியாக கொலை செய்யாமல், தன்னுடைய இந்துத்துவக் குண்டர்களை இறக்கி விட்டு இந்த கொலையை நடத்தி முடித்திருக்கிறது என்பதே அனைவரின் கருத்தாக அமைந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ஆதித்யநாத் அரசின் அமைச்சர்களின் கருத்து அமைந்துள்ளது.
இப்படுகொலை பற்றி, சுதந்திரதேவ் சிங் என்ற அமைச்சர் "இப்பிறவியின் பாவ-புண்ணியங்களின் கணக்கு இங்கேயே தீர்க்கப்படுகிறது", என்று விஷம் கக்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சரான சுரேஷ்குமார் கண்ணா, "குற்றச் செயல் உச்சத்தை அடையும் போது, இப்படித்தான் இயற்கை முடிவெடுக்கும்", என்று வன்மத்தோடு கருத்துத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான ஆதித்யநாத்தின் உச்சபட்ச பகைமை, உ.பி அமைச்சர்களின் விஷம் தோய்ந்த வெறுப்புப் பேச்சுக்கள், போலீஸாரின் கண்ணெதிரிலேயே கொலைகாரர்கள் மிக நெருக்கத்தில் இருந்து அதிக் அஹமதுவின் நெற்றிப் பொட்டில் சுட்டது, சகோதரர்கள் இருவர் மீதும் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தோடு சுமார் 10 குண்டுகளை மாறி, மாறி சுட்டது என அனைத்துமே நடந்திருப்பது State sponsored terrorism என்னும் அரச பயங்கரவாதம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
*இந்த அக்கிரமத்தை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றமும், மனித உரிமை அமைப்புகளும் உடனடியாகத் தலையிட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து, உச்சபட்ச தண்டனை வழங்கி நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது.*
இவண்,
A.S.அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ( NTF)
No comments