முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை திருத்தம்! NTF நன்றி அறிவிப்பு!
பத்திரிகை அறிக்கை:
12/04/2023.
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை திருத்தம்!
தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ( NTF) நன்றி அறிவிப்பு!
6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு & 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணை சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 28ஆம் தேதி முடிய தேர்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையில், ஏப்ரல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் ஒரு பாடத்திற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த 22/03/2023 புதன்கிழமை இரவு கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலில் பார்க்கப்பட்ட ரமலான் மாத தலைப்பிறையை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி 23/03/2023 வியாழக்கிழமை முதல் நோன்பு நோற்று வரும் கணிசமான முஸ்லிம்கள், வரும் 20/04/2023 வியாழக்கிழமை இரவு ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் ஆகும்.
ஒருவேளை அன்றிரவு பிறை தென்பட்டால், மறுநாள் 21/04/2023 வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்னும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய கடமை உள்ளது.
அவ்வாறு நிகழும் பட்சத்தில், 21/04/2023 அன்று பெருநாள் தினத்தில் தேர்வை எழுத வேண்டிய இக்கட்டான சூழல் முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்படும்; இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கடும் மன உளைச்சலையும், அதிருப்தியையும் உண்டாக்கும்.
எனவே, பரீட்சைகளுக்கிடையே போதிய இடைவெளி இருப்பதால் பெருநாள் வர வாய்ப்புள்ள 21/04/2023 வெள்ளிக்கிழமை மற்றும் 22/04/2023 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் தேர்வு நடத்துவதை தவிர்த்து, வேறு நாட்களில் மாற்றி வைக்க ஆவன செய்யுமாறு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) நிர்வாகிகள் நேரில் சந்தித்து விபரமாக விளக்கி, கோரிக்கை மனுவும் அளித்தார்கள்.
நமது கோரிக்கையை ஏற்று திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை சற்று முன் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் கோரிக்கையை கனிவுடன் கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மனமுவந்த நன்றியை சமுதாயத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறது.
இவண்,
A.S.அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments