முக்கிய அறிவிப்புகள்

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று தமிழக முஸ்லிம்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

பத்திரிகை அறிக்கை:

08/04/2023.    

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று தமிழக முஸ்லிம்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை,  11/04/23 முதல் 28/04/23 முடிய சுமார் 18 நாட்கள்  நடத்துவதாக வெளியிட்டுள்ள முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையில் வரும் 21/04/2023 வெள்ளிக்கிழமை அன்று 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பரீட்சை உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த அறிவிப்பானது, இப்போது ரமலான் மாதம் நோன்பை கடைப்பிடித்து வரும் முஸ்லிம்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், தமிழக முஸ்லிம்களைப் பொருத்த வரை அரசு தலைமை காஜியின் பிறை அறிவிப்பை அப்படியே ஏற்று பண்டிகைகளைக்  கொண்டாடக் கூடிய முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தாலும், காஜி  உட்பட எந்த தனி மனிதரையும் ஆன்மீகத் தலைமை பீடமாக ஏற்றுக் கொள்ளாமல், இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் போதனை (ஹதீஸ்) ஆகியவற்றை மட்டும் பின்பற்றி வாழும் மார்க்க விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் சுமார் 25%க்கும் குறையாத அளவில் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். 

அத்தகைய முஸ்லிம்கள், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கடந்த 22/03/23 புதன் இரவு பார்க்கப்பட்ட தலைப் பிறையை அடிப்படையாகக் கொண்டு இந்த வருட ரமலான் நோன்பை 23/03/23 வியாழன் முதல் கடைபிடித்து வருகின்றனர்.

அத்தகைய கணிசமான முஸ்லிம்களின் கணக்கீட்டின் படி வரும் 20/04/23 வியாழன் இரவு அடுத்த மாதத்திற்கான தலைப் பிறையை தேட வேண்டிய நாள் ஆகும். 

ஒருவேளை 20/04/23 வியாழன் இரவு பிறை தென்பட்டால், மறுநாள் 21/04/23 வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்னும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்க வழிகாட்டுதல் ஆகும்.

எனவே, 21/04/23 வெள்ளி அன்று பண்டிகை கொண்டாட வாய்ப்புள்ள இந்த சூழ்நிலையில், அதே 21/04/23 வெள்ளிக்கிழமை பரீட்சை நடத்தினால், அம்முஸ்லிம் மாணவர்களுக்கு

கவனமாக பரீட்சை எழுதக் கூடிய  மனநிலை அமையாது என்பதோடு, அந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாட இயலாத மன உளைச்சல் உண்டாக்கும் என்பதை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் மேலான கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை 08/04/23 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்த NTF மாநில துணைத் தலைவர் சகோ.நஜீர் அஹமது அவர்களுடைய தலைமையிலான மாநிலச் செயலாளர் சகோ.உணர்வு இபுறாஹிம், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய NTF நிர்வாகிகள் குழு கோரிக்கை மனு அளித்து இருக்கிறது.

"தேர்வுகளுக்கிடையே ஒருசில நாட்கள் இடைவெளி இருக்கும் நிலையிலும் கூட பண்டிகை வர வாய்ப்புள்ள 21/04/23 தேதியில் குறிப்பாக தேர்வு நடத்துவது அதிகாரிகளின் கவனக்குறைவால் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கலாம்" என்றும், "இவ்விஷயத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு 21/04/23 வெள்ளிக்கிழமை அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வை 21/04/23 மற்றும் 22/04/23 ஆகிய இரு நாட்களைத் தவிர்த்து விட்டு, அதற்கு முன்பின் வேறு நாட்களுக்கு மாற்றி வைக்க ஆவன செய்ய வேண்டும்", என்றும் நாம் விடுத்த கோரிக்கையை கனிவுடன் செவிமடுத்த அமைச்சர் அவர்கள், நிச்சயம் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

இவண்,

A.S.அலாவுதீன்,

பொதுச்செயலாளர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).


No comments