பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கே கைது மற்றும் வீடு இடிப்பு தண்டனையா? ஹரியானா பாஜக அரசின் அட்டூழியம்!
பத்திரிகை அறிக்கை:
07/08/2023.ஆயுதங்கள் சகிதம் கலவரம் செய்த இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பா?
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கே கைது மற்றும் வீடு இடிப்பு தண்டனையா?
ஹரியானா பாஜக அரசின் அட்டூழியம்!
சில தினங்களாக ஹரியானாவில் VHP - பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் துப்பாக்கி, வாள் போன்ற அபாயகரமான ஆயுதங்களோடு, அம்மாநில காவல்துறையின் அனுமதியோடும், அம்மாநில பாஜக அரசின் ஆதரவோடும் மத ஊர்வம் என்ற பெயரில், முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் இனக்கலவரத்தை தொடங்கி வன்முறை வெறியாட்டம் ஆடி வருகின்றனர்.
இக்கலவரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டதோடு பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டு, அங்கிருந்த இளம் வயது இமாம் அடித்துக் கொல்லப்பட்டார்.
முஸ்லிம்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரத்தை தூண்டிய இந்துத்துவ பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய வகையில் நிவாரணம் அளிக்கக் கடமைப்பட்டுள்ள ஹரியானா மாநில அரசு, இதற்கு நேர் முரணாக ஆயுதங்களோடு ஊர்வலமும், மதவெறியோடு இனக்கலவரமும் நடத்திய VHP - பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் முஸ்லிம்களையே குறிவைத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது.
ஊர்வலத்தில் கல்லெறிந்தார்கள் என்று குற்றம் சாட்டி நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்குவதோடு, சிறார்கள் உட்பட ஏறத்தாழ 175க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.
இது அப்பட்டமான அரச பயங்கரவாதம் ஆகும்.
இதனை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.
அங்குள்ள முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை; மாறாக, கலவரக்காரர்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டார்கள். இது எந்த விதத்திலும் தவறு ஆகாது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள தற்காப்பு உரிமையின்படி இது சட்டத்திற்குட்பட்டதே.
இதைக் கூட முஸ்லிம்கள் செய்ய இந்த நாட்டில் அனுமதி இல்லையா?
காட்டுமிராண்டி ஆட்சி நடத்தி வரும் உ.பி ஆதித்யநாத், ம.பி சிவராஜ்சிங் சௌஹான், ஹரியானா மனோகர்லால் கட்டார் போன்ற பாசிச பாஜக முதல்வர்கள் தங்களுடைய முஸ்லிம் விரோத புல்டோசர் ஆட்சியின் மூலம் என்னதான் சொல்ல வருகிறார்கள்?
தங்களுடைய வாழ்விடங்களில் எதிரிகள் பயங்கர ஆயுதங்களோடு நுழைந்தாலும், தங்களுடைய வாழ்வாதாரங்களை அழித்தாலும், தங்களைக் கொலையே செய்தாலும் எந்த எதிர்ப்பும் இன்றி இந்துத்துவ பயங்கரவாதிகளிடம் முஸ்லிம்கள் சரணடைய வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் நூஹ், மேவார் பகுதிகளில் கூட முஸ்லிம் தொடர்ந்து வசிக்க முடியாத அளவுக்கு அரசுத் தரப்பிலிருந்தும், இந்துத்துவ பயங்கரவாதிகளிடமிருந்தும் பகிரங்க மிரட்டல் வருவதாக அங்குள்ள முஸ்லிம்கள் கண்ணீர் வடிப்பதாக செய்திகள் வருகின்றன.
முஸ்லிம்களும் - இந்துக்களும் அமைதியாக வாழ்ந்து வருவதை பொறுக்க மாட்டாமல், அங்கே நெருங்கி வரும் தேர்தலை முன்னிட்டு மத அடிப்படையில் திட்டமிட்டு மக்களை பிளவுபடுத்தும் சதியாகத்தான் இந்த இனக்கலவரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்ற உண்மையை நடுநிலையாளர்கள், ஊடகவியளாலர்கள் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் தானாகவே தலையிட்டு, அம்மாநிலத்தில் அமைதி திரும்பவும், சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் அரசியல் சாசனத்தின்படியான மதச்சார்பற்ற ஆட்சி நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அதேநேரம், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ள ஹரியானா முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்காமல் மௌனம் காப்பது அக்கட்சி இன்னும் திருந்தவில்லை; கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவண்:
A.S. அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments