கல்விக் கூடங்களில் தொடர்ந்து மறுக்கப்படும் முஸ்லிம் மகளிர் உரிமை! NTF கண்டனம்!
21/08/2023
பத்திரிகை அறிக்கை
கல்விக் கூடங்களில் தொடர்ந்து மறுக்கப்படும் முஸ்லிம் மகளிர் உரிமை!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கண்டனம்!
தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு நிரந்தர தீர்வை தர வேண்டும்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:
சபானா என்ற பெண் ஒரு தனியார் பள்ளியில் அரபி மொழி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தனது முகத்தை மறைக்காத வகையில் ஹிஜாப் அணிந்து நேற்று திருவண்ணாமலை, சோமாஸ்பாடியில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஒன்றிய அரசின் மூலம் நடத்தப்படும் ஹிந்தி மொழி தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, ஹிஜாபை கழற்றிவிட்டு தேர்வு எழுதுமாறு பள்ளியின் முதல்வரும் தாளாளரும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அவர் ஹிஜாபை கழற்ற மறுத்து கெஞ்சி கேட்ட பிறகும் மதவெறி பிடித்த தாளாளர் அவரது தேர்வெழுதும் அட்டையை பிடுங்கி தேர்வறைக்கு வெளியில் வீசி சபானாவையும் வெளியில் விரட்டியுள்ளார்.
கல்விக் கூடங்களில் ஹிஜாபுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத தமிழ் நாட்டில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அந்தப் பள்ளியில் நடந்த இத்தகைய மதவெறிப் போக்கை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் கல்விக் கூடங்களில் ஹிஜாபுக்கு எதிரான மனநிலை கொண்ட மதவெறிச் செயல் என்பது இது முதல் முறை அல்ல.
ஏற்கனவே சென்ற, 02/03/2022 அன்று இதே திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், ஹிஜாப் அணிந்து சென்ற பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியை லக்ஷ்மி என்ற ஆசிரியை ஹிஜாபை கழற்றிவிட்டு வருமாறு உத்தரவு போட்ட சம்பவம் போளூரில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதற்கு சில நாட்களுக்கு முன்னரும் பிப்ரவரி 2022ல் அதே பள்ளியில் இதேபோல சம்பவம் நடந்தது. அப்போது இருந்த தலைமை ஆசிரியை, ஆசிரியையின் போக்கை கண்டித்து, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரி பிரச்சனையை அமுக்கி வைத்தார்.
போலீசாரும் தலையிட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் நிலைமையை கையாண்டு சமாதானம் செய்தனர்.
2022 பிப்ரவரி முதல் வாரத்தில் இதே போன்ற சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஓர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலும் நடந்தது.
அங்கு ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியை ஹிஜாபுடன் பள்ளிக்கு வர நிர்வாகம் அனுமதிக்காத நிலையில், அம்மாணவியின் தாயார் தன்னந்தனியே போராடி, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் என உயரதிகாரிகளை அணுகிய பிறகு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
கவிழ்ந்து போன முந்தைய கர்நாடகா மாநில பா.ஜ.க. அரசு, ஹிஜாபுக்கு எதிராக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையிலேயே அங்குள்ள கல்வி நிறுவனங்கள் ஹிஜாபுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஹிஜாபுக்கு எதிரான அரசாணை குப்பைக் கூடைக்குப் போனது.
ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆண்ட அ.தி.மு.க. அரசோ, இப்போது ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க. அரசோ ஹிஜாப் குறித்த எந்த அரசாணையும் பிறப்பிக்காத நிலையில், தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்த ஆபத்தான போக்கு தலையெடுத்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் நமது கவனத்திற்கு வராத எத்தனையோ பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் என ஒரு பெரும் ஆசிரியர் குழுவே இந்துத்துவ மதவெறி பாசிச சித்தாந்தத்திற்கு அடிபணிந்து இருக்க வாய்ப்பு இருப்பதை யாரும் புறக்கணித்து விட முடியாது.
குறிப்பாக பள்ளிகளில் மத துவேஷத்தைக் கையாளும் ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் கழுகுப் பார்வையுடன் செயல்பட்டு மதவெறிப் போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சபானா என்ற பெண்ணின் கல்வி உரிமை மற்றும் மத உரிமையை பறித்து, மதவெறியுடன் செயல்பட்ட திருவண்ணாமலை, சோமாஸ்பாடி அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நிரந்தரமாக பணி நீக்கமும் செய்ய வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் இது போன்ற சம்பவத்தை நிகழ்த்த முயல்வோருக்கு அச்சம் ஏற்படும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
இனிமேல் இதுபோல் நடக்காத வகையில் அனைத்து கல்விக் கூடங்களுக்கும் இது குறித்து தெளிவான உத்தரவை கல்வித் துறை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற சேட்டைகளை காவிச் சிந்தனை கொண்ட ஆசிரியர்கள் செய்து, சமூகநீதி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவார்கள் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டுமென கோருகிறோம்.
இவண்,
ஏ. எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments