முக்கிய அறிவிப்புகள்

பாஜக அரசின் தவறுகளையும், பிரதமர் மோடியின் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் எதிர்கட்சித் தலைவர்கள் முடக்கம்! NTF அழைப்பு!!

பத்திரிகை அறிக்கை:

நாள்:25/03/2023.

பாஜக அரசின் தவறுகளையும், பிரதமர் மோடியின் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் எதிர்கட்சித் தலைவர்களை முடக்கும் எதேச்சதிகாரத்தை துணிச்சலோடு ஒற்றுமையாக எதிர் கொண்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அழைப்பு!

கடந்த பொதுத்தேர்தலின் போது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசும் போது "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் மோடி என்ற பொதுவான பெயரையே வைத்திருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.11,360 கோடி மோசடி செய்த நபர்தான் குஜராத் மாநிலம் பாலன்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி; அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)-ன் நிர்வாகியாக இருந்த போது பல மில்லியன் பணத்தை மோசடி செய்த நபர்தான் லலித் மோடி. இந்த இரு மோடிக்களாலும் இந்தியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருந்த போதிலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காமல், அவர்கள் பாதுகாப்பாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல உதவியாக இருந்தது நரேந்திர மோடியும், அவரது தலைமையிலான ஒன்றிய அரசும்தான் என்பது அப்போதைய காலகட்டத்திலேயே நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த விஷயத்தில் அனைத்து எதிர்கட்சிகளுமே பிரதமர் மோடியின் கள்ளத்தனத்தையும், அவரது அரசின் கையாலாகத்தனத்தையும் கண்டித்தன - பிரச்சாரம் செய்தன. இதையொட்டித்தான் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரமும் அமைந்திருந்தது.

ஆனால், அரசியல் ரீதியிலான இந்த குற்றச்சாட்டை திட்டமிட்டு திசைதிருப்பும் வகையில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி என்பவர் இதை மோடி என்ற சமூகத்தின் மீதான அவதூறாக சித்தரித்து குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுல்காந்தியின் பேச்சால் எந்த விதத்திலும் நேரடியாக பாதிப்பு அடையாத புர்னேஷ் மோடிக்கு criminal defamation case - கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுக்க முகாந்திரமே இல்லை.

இருந்த போதிலும் 2019 ஏப்ரல் 13-ல் ராகுல்காந்தி பேசிய பேச்சிற்காக, ஏப்ரல் 16ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி ராகுல்காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்கிறார்.

ஆனால், ராகுல்காந்தி தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று புகார்தாரர் புர்னேஷ் மோடி 2022ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், குஜராத் உயர்நீதிமன்றம் சென்று அவரே இந்த வழக்கிற்கு தடை வாங்குகிறார்.

இப்படியே ஓராண்டு கடக்கிறது.

பிறகு, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையே சூறையாடிய அதானியும், பிரதமர் மோடியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டி, "அதானிக்கும், மோடிக்கும் உள்ள உறவு என்ன? இந்தியப் பொருளாதாரத்தைக் காவு கொடுத்தாவது அதானியைக் காப்பாற்ற மோடி போராடுவதன் ரகசியம் என்ன?" என அதிரடியாக கேள்வி எழுப்புகிறார் ராகுல்காந்தி. இது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை எழுப்புகிறது. மோடி ஊழல் கறை படியாத உத்தமர் என மீடியாக்களின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டிருந்த போலி பிம்பம் சடசடவென உடைந்து, மோடியின் சுயரூபம் அம்பலப்பட்டுப் போகிறது. பாசிச பாஜகவின் இமாலய ஊழலும், மோடியின் கள்ள மவுனமும் நாடெங்கும் பேசப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி புர்னேஷ் மோடி மீண்டும் குஜராத் உயர்நீதிமன்றம் சென்று ராகுல்காந்தி மீதான வழக்கிற்கு தான் பெற்ற தடை உத்தரவை திரும்பப் பெறுகிறார்.

இதனைத் தொடர்ந்து வாதங்களைத் தொடர மார்ச் 17ஆம் தேதி நீதிபதி அனுமதி அளிக்கிறார்.

23ஆம் தேதி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சூரத் கீழ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த நீதிபதி தங்களுடைய நிர்பந்தத்திற்கு அடிபணியாதவர் என்பதால், அவரை மாற்றிவிட்டு தமக்குத் தோதான நீதிபதியை அமர வைத்து இந்த தீர்ப்பை வாங்கி இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பு அநியாயமான தீர்ப்பு என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மேல்முறையீடு செய்ய தமக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் அவகாசத்தை பயன்படுத்திக்கொள்ள ராகுல் காந்திக்கு வாய்ப்பு வழங்காமலே, அவசர அவசரமாக அவருடைய M.P பதவியை பறித்து, வயநாடு தொகுதியை காலி இடமாக அறிவித்திருக்கிறது மோடியின் பாசிச அரசு.

ஒரு ஜனநாயக நாட்டில் செய்யப்பட்ட எதார்த்தமான தேர்தல் பிரச்சாரத்தைக் காரணமாக வைத்து ஒரு பிரதான எதிர்கட்சித் தலைவரை, எதிர்காலத்தில் பிரதமராகப் போகிறவர் என நாடே எதிர்பார்க்கும் ஒரு மாபெரும் மக்கள் தலைவரை கைது செய்யவும், நாடாளுமன்றத்திற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கவும் சதி செய்வது அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கை என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு வாதத்திற்காக தேர்தல் பிரச்சாரத்திலும், பேட்டிகளிலும் தலைவர்கள் பேசுவதை வைத்து கைது செய்வதாக இருந்தால் நரேந்திர மோடி, அமித்ஷா உட்பட ஆதித்யநாத், உமாபாரதி, ப்ரக்யா சிங் போன்ற எண்ணற்ற பாஜககாரர்கள் வாழ்நாள் முழுதும் சிறையில்தான் அடைக்கப்பட வேண்டும். மோடி பிரதமர் பதவியில் இருந்தும், அமித்ஷா உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தும், ஆதித்யநாத் உ.பி முதலமைச்சர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், இந்துத்துவத்தை ஏற்காத மற்றவர்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகவே வெறித்தனமாகவும், வன்முறையாகவும், அநாகரீகமாகவும் பேசி இருக்கிறார்கள் - பேசி வருகிறார்கள்.

எனவே, ஜனநாயகத்தையும், மக்களாட்சித் தத்துவத்தையும் காப்பாற்றி, மோடி என்னும் சர்வாதிகாரியிடம் இருந்தும், பாஜக என்னும் பாசிசக்கும்பலிடம் இருந்தும் இந்திய தேசத்தைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை உணர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள அநியாயமான தண்டனையை ரத்து செய்து, அவர் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்று ஜனநாயகக் கடமையாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வேண்டுகோள் வைக்கிறது.

குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களை காரில் அடிபடும் நாய்களோடு ஒப்பிட்டு பேசிய நரேந்திர மோடி மீதும், முஸ்லிம்கள் நாட்டை அரிக்கும் கரையான்கள் என வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமித்ஷா மீதும், CAAவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அப்பாவி மக்களை அப்பட்டமாக மிரட்டும் விதமாக "எங்களுடைய பேச்சைக் கேட்டு போராட்டத்தை நிறுத்தாவிடில், துப்பாக்கிக் குண்டுகள் மூலம் நிறுத்துவோம்" என வன்முறையாகப் பேசிய ஆதித்யநாத் மீதும், காந்திஜியை சுட்டுக் கொலை செய்த கோட்சேவை 'தேசபக்தர்' என்று நாடாளுமன்றத்திலேயே புகழ்ந்து பேசிய ப்ரக்யா சிங் தாகூர் மீதும் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிடும் நாட்டு மக்கள், இனி எந்த மாதிரியான நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்கப்போகின்றது என்பதையும் கவனித்தே வருகிறார்கள் என்பதையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சுட்டிக் காட்ட விரும்புகிறது.

இவண்.
A.S.அலாவுதீன்,
மாநில பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).


No comments