முக்கிய அறிவிப்புகள்

மாட்டிறைச்சியின் பெயரால் மீண்டும் ஒரு அப்பாவி முஸ்லிம் படுகொலை. பீஹார் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள் வெறியாட்டம். NTF கடும் கண்டனம்!

பத்திரிகை அறிக்கை:

11/03/2023.

மாட்டிறைச்சியின் பெயரால் மீண்டும் ஒரு அப்பாவி முஸ்லிம் படுகொலை.

பீஹார் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள் வெறியாட்டம்.

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!

சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மிகப் பெரும்பாலும் மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த இந்தியாவை, மதவெறிக்களமாக்கி, ரத்தக்களரி ஆக்கி வைத்திருக்கின்றன  தற்போது ஒன்றிய அரசை நடத்தும் பாசிச பாஜகவும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஒருவர் தான் விரும்பிய உணவை உட்கொள்ளும் தனிநபர் உரிமையைப் பறித்து, அரசு அனுமதிப்பதை மட்டுமே உண்ண வேண்டும் என மக்களை அரசாங்கம் நிர்பந்தப்படுத்தும் சர்வாதிகாரப் போக்கு தற்போது தலைவிரித்து ஆடுகிறது.

இஸ்லாமிய வெறுப்பிலும், முஸ்லிம்களை கருவறுப்பதிலும் ஊறித் திளைக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக இந்துத்துவ கும்பல்கள் மத்திய - மாநில ஆட்சிகளில் அமர்ந்த பிறகு, இந்துத்துவத்தைக் காப்பாற்றும் போர்வையில் "மாடுகளை அறுக்கக் கூடாது; மாட்டிறைச்சியை உண்ணவோ, விற்பனை செய்யவோ கூடாது", என்று சட்டம் இயற்றி அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக அழிச்சாட்டியம் செய்து வருகின்றன.

அதிலும் கூடுதல் அக்கிரமம் என்னவென்றால், மாட்டிறைச்சி தொடர்பாக அரசாங்க ரீதியாக நடவடிக்கை எடுப்பதை விட, இந்த சாக்கில் இந்துத்துவ குண்டர்கள் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி கடுமையாகத் தாக்குவதும், அடித்துக் கொலை செய்வதும் அரசாங்க ஆதரவோடு அடிக்கடி அரங்கேறி வருகிறது.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி பரப்பப்பட்டு 2015 அக்டோபரில் உ.பி மாநிலம் தாத்ரியில் இந்துத்துவ வெறியர்களால் அஹ்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டது, 2017-ல் மாட்டைக் கடத்தியதாக பழி சுமத்தப்பட்டு, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் இந்துத்துவ வெறியர்களால் பெஹ்லு கான் அடித்துக் கொலை செய்யப்பட்டது போன்ற ஒரு படுகொலை பிஹார் மாநிலத்தில் தற்போது நடந்துள்ளது.   

பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஸீப் குரேஷி (வயது 47). நஸீப் குரேஷியும், அவரது உறவினர் ஃபிரோஸ் அஹமது குரேஷியும் இரு சக்கர வாகனம் ஒன்றில் ஜோகியா கிராமத்திற்குள் நுழையும் போது, அக்கிராமத் தலைவரான சுஷில் சிங், 'இவர்கள் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பழி சுமத்தி, அவர்களைத் தாக்குமாறு' அங்கே இருந்த 10-15 பேர் அடங்கிய கும்பலைத் தூண்டி விட்டுள்ளார்.

நிலைமை விபரீதம் அடைவதைக் கண்ட ஃபிரோஸ் அஹமது குரேஷி வண்டியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட, நஸீப் குரேஷி அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

செங்கல், மரக்கம்பு, மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கிய அந்த மதவெறிக் கும்பல், அதன் பிறகு அவரை ரசூல்பூர் கிராமத்தில் காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளது.

படுகாயமுற்ற நஸீபை காவல்துறை உடனடியாக தகுந்த  மருத்துவமனையில் சேர்க்காமல், தரவுந்தா காவல் நிலையம், பிறகு அருகில் இருந்த  மருத்துவமனை, அதற்குப் பிறகு சிவான் சதர் மருத்துவமனை, பிறகு அங்கிருந்து பட்னா மருத்துவமனை என அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டதால் பட்னா கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

நஸீப் படுகாயத்தோடு இருந்தும் கூட, ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்யாமல், மோட்டார் சைக்கிளில் வைத்து அவரை போலீஸ் அலைக்கழிவு செய்ததாக நஸீபின் சகோதரர் அஷ்ரஃப் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.     

நஸீபை அடித்துக் கொன்ற கிராம பஞ்சாயத்துத் தலைவர் சுஷில் சிங், உஜ்வல் சர்மா, ரவி ஷா ஆகிய குற்றவாளிகளின் மீது காவல்துறை 

IPC-302 (கொலை)

IPC-34 (கூட்டு நோக்கத்தோடு கும்பலாக செயல்டுதல்)

IPC- 379 (திருட்டு)

ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ள போதிலும், ரசூல்பூர் போலீஸார் குற்றவாளிகளைக் காப்பாற்றி, கொலையை மறைக்க முயல்வதாக அஷ்ரஃப் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனிதாபிமானம் அற்ற இந்தப் படுகொலையை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.

குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்காமல், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த நஸீப் குரேஷி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிஹார் மாநில அரசை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும், மதப் போர்வையில் பசுப் பாதுகாப்பு என்று நாடகமாடி அப்பாவிகளை கொல்வதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், 

அரசியல் சாசனத்திற்கு எதிரான, அறிவுக்குப் புறம்பான, தனிநபர் உரிமையை மறுக்கும் எதேச்சதிகாரமான "மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை" உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவண்,

A.S.அலாவுதீன்,

பொதுச்செயலாளர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).



No comments