முக்கிய அறிவிப்புகள்

மதுரையில் அப்பாவி முஸ்லிம் மீது NIA அதிகாரிகள் கொலைவெறித் தாக்குதல் NTF கடும் கண்டனம்!

பத்திரிகை அறிக்கை:

09/03/2023.

மதுரையில் அப்பாவி முஸ்லிம் மீது NIA அதிகாரிகள் கொலைவெறித் தாக்குதல்.

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்னா. மிகவும் ஏழ்மையான இவர் முன்பு சிறிய அளவில் உள்ளாடைகள் விற்பனை செய்து வந்தவர், தற்போது  நண்பர் ஒருவருடைய மொபைல் போன் கடையில் வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 3ஆம் தேதி இவரைத் தொடர்பு கொண்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள், இவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகக் கூறி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள NIA அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.

அதற்கான அழைப்பாணை - சம்மனை வாட்ஸ்அப்பில் அனுப்பியதைத் தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் NIA அலுவலம் சென்ற அவரிடம் PFIக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்ததோடு, PFIயைச் சேர்ந்த சில நபர்களைக் குறிப்பிட்டு, அவர்களோடு அவருக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்துள்ளனர். 

அதற்கு, அவர் "தான் SDPI ஆதரவாளர்; அதேநேரம், தான் வேறு மாவட்டத்திலிருந்து சில வருடங்களுக்கு முன்பாக  பிழைப்பிற்காக மதுரை வந்து குடியேறி உள்ளதால்  NIA அதிகாரிகள் விசாரிக்கும் குறிப்பிட்ட நபர்களைப் பற்றி தனக்கு அவ்வளவாக விபரம் தெரியாது",  என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால், இந்த பதிலை ஏற்றுக்கொள்ள மறுத்த NIA அதிகாரிகள், அவரையும், முஸ்லிம் சமூகத்தையும் அவதூறாகப் பேசியதோடு, "எல்லோரையும் சுட்டுக் கொலை செய்து விடுவோம்", என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.      

அதோடு, NIA அதிகாரிகள் குறிப்பாக செந்தில் குமார் என்ற அதிகாரியும், மற்றொரு பெண் அதிகாரியும் ஜின்னா அவர்களை கண்மூடித்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஜின்னா மயக்கடைந்துள்ளார்.

அதன்பிறகு, ஜின்னாவின் உடல்நிலை மோசமடைவதைக் கண்ட NIA அதிகாரிகள்  சுயநினைவு அற்ற நிலையில் மதுரை அரசு மருத்துவனைக்கு

அவரைக் கொண்டு சென்று, திடீரென்று வலிப்பு நோய் வந்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து விட்டு, ஜின்னாவுடைய போனில் இருந்தே அவருடைய மனைவிக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால், மறுநாள் காலை சுயநினைவு திரும்பிய ஜின்னா, தன்னை NIA அதிகாரிகள் கொலைவெறியோடு கடுமையாகத் தாக்கியதையும், அதன் காரணமாகவே தான் மயக்கம் அடைந்ததையும் மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.      

அதன் பிறகே உண்மை வெளியாகி, அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த, நற்குணமுடையவர் என அப்பகுதி மக்களால் மதிக்கப்படக் கூடியவரான கோரிப்பாளையம் ஜின்னா அவர்கள் மீதான NIA அதிகாரிகளின் கொலைவெறித் தாக்குதல் அப்பட்டமான மதவெறிப்போக்கும், மனித உரிமை மீறலும் ஆகும்.

இக்கொடும் தாக்குதலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மிக வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட NIA அதிகாரிகள் மீது கொலை முயற்சி உட்பட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் ஏற்கனவே தகுந்த அமைப்புகள் உள்ள நிலையில், மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, ஒன்றிய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள,

NIA என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துவதோடு, முஸ்லிம்களை ஒடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள NIA-ன் செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நமது மாநில எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் மாநில அரசுகளின்  உரிமையை உறுதிப்படுத்தி மாநில சுயாட்சியை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவண்,

A.S.அலாவுதீன்,

மாநில பொதுச்செயலாளர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments