முக்கிய அறிவிப்புகள்

திருச்சியில் நடைபெற்ற (NTF) மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஏக இறைவனின் திருப்பெயரால்…

ஜனவரி 8 - 2023 அன்று திருச்சியில் நடைபெற்ற (NTF) மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

**************

தீர்மானம்:1

மாநாட்டு பிரகடனம்!

உலகில் வாழும் 200 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், வழிகாட்டியுமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் தமது உயிரினும் மேலாக மதிக்கிறது என்பதை இம்மாநாடு பிரகடனம் செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்த யார் முயன்றாலும்  அவர்களுக்கு எதிராக இச்சமுதாயம் ஒன்றிணைந்து களமாடும் என்பதையும், இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முஸ்லிம் சமுதாயம் தயாராக உள்ளது என்பதையும் இம்மாநாடு அழுத்தமாக பதிவு செய்கிறது.

தீர்மானம்:2

நுபுர் சர்மாவை சட்ட விரோத தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

நபிகள் நாயகத்தின் அப்பழுக்கற்ற - ஒழுக்க விழுமியங்களைக் கொச்சைப்படுத்தி, உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஈட்டியைப் பாய்ச்சிய பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் டெல்லி பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் இருவரையும் உலகமே கண்டித்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கி, வெறும் கண்துடைப்பிற்காக உப்பு சப்பில்லாத வழக்கைப் பதிந்து அவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டு,  ஏறத்தாழ ஏழு மாதங்களாக அவர்களைக் கைது செய்யாமல் பாதுகாத்து வரும் மத்திய உள்துறையை இம்மாநாடு கண்டிக்கிறது. உடனடியாக அவர்களை சட்டவிரோத தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்:3

இந்தியாவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை!

மதச்சார்பற்ற இந்தியாவில் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம், இஸ்லாமிய மார்க்கத்தை இல்லாமல் ஆக்கி, முஸ்லிம்களை ஒழித்துவிடலாம் என கனவு காணும் காவி மதவெறியர்களின் எண்ணம் உலகம் அழியும் வரை நிறைவேறாது என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்திற்கு எதிராக, மேற்கத்திய உலகம் மேற்கொண்ட பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் போர்களால் கூட, இஸ்லாத்தை இம்மியளவும் அசைக்க முடியாமல் தோல்வி கண்ட வரலாறு இதற்குச் சான்றாக விளங்குகிறது.

இஸ்லாம் ஒரு காலத்திலும் வீழ்ச்சியடையவில்லை; மாறாக அதன் தனிச் சிறப்பால் வளர்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு இம்மாநாடு நினைவூட்டுகிறது.

தீர்மானம்:4

முஸ்லிம் அல்லாத நன்மக்கள் உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும்!

மதவெறித் தீயை மூட்டி, மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக சில தீய சக்திகள், இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைக் கூறி அப்பாவி இந்துக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள்.

இவர்களின் சூழ்ச்சியை உணராத அப்பாவி மக்கள் சிலர், இஸ்லாம் பற்றியோ நபிகள் நாயகம் பற்றியோ உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், இவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிவிடுகிறார்கள். இந்த அபாயகரமானப் போக்கை இம்மாநாடு கவலையுடன் பார்க்கிறது.

எனவே, முஸ்லிம் அல்லாத நன்மக்கள் அனைவரும் இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் படித்து, உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும் எனவும், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக சகோதரத்துவ உணர்வோடு வாழ்ந்து நாட்டில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்க பாடுபட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:5

முஸ்லிம் சமுதாயத்துக்கு கோரிக்கை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத மக்கள் சரியாக அறிந்து கொள்ளும் வகையில் முஸ்லிமல்லாத மக்களை அழைத்து உபசரித்து, நபிகள் குறித்து சொல்லப்படும் அவதூறுகளுக்கும், பொய்ப் பிரச்சாரத்திற்கும் தக்க மறுப்புகளுடன் விளக்கம் அளிப்பதை இடைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இம்மாநாடு முஸ்லிம் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம் அல்லாதவர்களிடமும் சிறந்த முறையில் நடந்து கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால், அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்  கொள்ளுமாறும், தான தர்மங்கள் செய்யும் போது மத அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் முஸ்லிம் அல்லாத மக்களும் நமது தான தர்மங்களால் பயன்பெறும் வகையில் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு முஸ்லிம் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:6

மாமனிதர் நபிகளாரின் போதனைகளை உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்!

மனித குலம் இம்மை - மறுமை என ஈருலகிலும் ஈடேற்றம் பெற, திருக்குர்ஆனை போதித்து, அதன்படி வாழ்ந்து காட்டி, உலகில் எவராலும் சாதிக்க முடியாததை செய்து காட்டிய வரலாற்று நாயகர் தான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

இம்மானிதருக்கு இணையான தலைவரை வரலாறு இதுவரை கண்டதும் இல்லை - இனி காணப் போவதும் இல்லை.

இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே மனிதகுலம் பின்பற்றத் தகுந்த ஒரே தலைவர்.

எனவே, திருக்குர்ஆனையும், நபிகளாரின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி தம்முடைய வாழ்வியல் நெறியை அமைத்துக் கொண்டு, இறைவனின் திருப்தியைப் பெற்றிட வேண்டும் என அனைவரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்:7

பயங்கரவாத எதிர்ப்பு!

போர்க்களத்தில் கூட மத குருமார்கள், பெண்கள், சிறுவர்கள், அப்பாவிகளைக் கொல்வதையும், நீர் நிலைகள், மரங்களை அழிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். பயங்கரவாதச் செயல்களை அங்கீகரிக்கவும் இல்லை.

எனவே அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும், அது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் அதை ஆதரிப்பதில்லை என்பதையும், முஸ்லிம்களுக்கும் அச்செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இம்மாநாடு  உறுதியாக அறிவிக்கிறது. 

அத்தகைய சிந்தனைப் போக்கு சமுதாயத்தில் தலையெடுக்காமல் ஜமாஅத்தினர் விழிப்புடன் செயலாற்றுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:8

மதவெறியர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!

இந்திய நாடு அதன் மதச்சார்பற்ற கொள்கையாலும், ஜனநாயக விழுமியங்களாலும் உலக அரங்கில் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது. இந்த நன்மதிப்பு தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், ஒன்றிய அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக - அரசியல் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்து, பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் மதவெறி மற்றும் மத வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சமூக நல்லிணக்கத்தையும், நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் காவி மதவெறி அமைப்புகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகமும், அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு, மதவெறியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:9

நீதிமன்றங்கள் சட்டத்தைக் காக்க முன்வர வேண்டும்!

2019 ல் பாபரி மஸ்ஜித் வழக்கில் அநியாயத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த தீர்ப்பு பாபரி மஸ்ஜித்-ராமஜென்மபூமி வழக்குக்கு மட்டுமே பொருந்தும். இதே முறையிலான தீர்ப்பு மற்ற வழிபாட்டுத் தலங்களின் விவகாரத்திற்குப் பொருந்தாது என்றார்.

மேலும், 1991ல் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய, வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்புச் சட்டத்தில், 1947ல் நாடு விடுதலையடைந்த போது, வழிபாட்டுத் தலங்கள் யார் வசம் இருந்ததோ அது அப்படியே தொடர வேண்டும். பாபரி மஸ்ஜித் வழக்கைத் தவிர, வேறு எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிமை கோரி வழக்குத் தொடர முடியாது என தெளிவாக உள்ளது.

அப்படி இருந்தும், வாரணாசியிலுள்ள கியான்வாபி மஸ்ஜிதையும், மதுராவிலுள்ள ஷாஹி ஈத்காஹ் மஸ்ஜிதையும் அபகரிக்கும் முயற்சியில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்று, தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட்ட செயல் அப்பட்டமான சட்ட மீறலாகும்.

சட்டத்தைக் காக்க வேண்டிய நீதிமன்றங்களே, அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதை, அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்க முடியாது.

வஞ்சிக்கப்பட்ட மக்களின் இறுதிப் புகலிடமான நீதித்துறையும், காவி மயமாகி வருவதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்தையும், இந்திய நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளது என்பதை நீதித்துறையின் கவனத்திற்கு இம்மாநாடு கொண்டு வருகிறது.

உ.பி.மாநில நீதி நிர்வாகம், வாரணாசி மற்றும் மதுரா வழக்குகளை சட்டத்தின் பார்வையில் மட்டும் அணுகி அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து, சட்டத்தை நிலைநாட்ட முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:10

இந்தியாவின் பன்முகத் தன்மையை பொது சிவில் சட்டம் தகர்த்து விடும்!

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

கஷ்மீர் விவகாரம் - 370 சட்டப்பிரிவு நீக்கம், ஒருங்கிணைந்த கஷ்மீரை துண்டாடியது, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் என தொடர்ந்து அரசியலமைப்பு வழங்கிய சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.

அதைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் உரிமையைப் பறிப்பதாக நினைத்துக்கொண்டு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.

இதற்கான பரிந்துரைக்காக, சட்டம்- நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுசில் குமார் மோடி என்பவர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்தது.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நாடு முழுவதும் கருத்தாய்வு நடத்தி பரிந்துரைக்க வேண்டும் என்பதால், ஒரு கமிட்டியை அமர்த்தி இதற்கான வேலைகளை முடுக்கிவிடும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது.

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதத்தினரும் தங்களின் மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப, திருமணம், விவாகரத்து உரிமை, வாரிசுரிமை, சொத்துப் பிரிவினை, இறப்பு, மத அனுஷ்டானங்கள் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். இது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை. 

முஸ்லிம்கள் மட்டும் அல்லாமல், இந்துக்களிலும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் என பல்வேறு சமூகங்கள் சிவில் விஷயங்களில் தங்களுக்கென பிரத்தியேக வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். 

'இந்து' என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டவர்களில் கூட அனைத்து பிரிவினரும் தங்கள் திருமணம், விவாகரத்து, வாழ்வியல், சொத்து விவகாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரே (Uniform) நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இதை மீறி பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், அனைவரும் வெகுண்டு எழுவார்கள்.

பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மத, இன மக்களுக்கும் எதிரானது. நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கக் கூடியது என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர்ந்து, பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என இம் மாநாடு அறிவுறுத்துகிறது.

தீர்மானம்:11

அப்பாவிகளை சிறையில் தள்ளும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்;!

பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், விமர்சனம் செய்பவர்கள், ஜனநாயக - அறவழியில் போராடுபவர்கள், நியாயத்தின் பக்கம் நின்று நடுநிலையோடு கருத்துக்களை தெரிவிக்கும்  மனித உரிமை போராளிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் என பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களை, தனது அதிகார பலத்தைத் தவறாக பயன்படுத்தி, அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, UAPA சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் தள்ளி வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

குஜராத் சம்பவத்தின் உண்மையை வெளியிட்டு, மோடிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய ஸகிய்யா ஜாஃப்ரிக்கு ஆதரவாக நின்ற சமூக ஆர்வலர் தீஸ்தா செதல் வாட் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதே காரணத்திற்காக குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பட் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கஷ்மீரைச் சேர்ந்த ஆசிப் சுல்தான் என்ற பத்திரிகையாளர் 5 ஆண்டுகளாக UAPA சட்டத்தில் சிறையில் வாடுகிறார்.

பத்திரிகையாளர் சித்தீக் காப்பன், காலித் ஷைபி, மாணவர் அமைப்பைச் சேர்ந்த உமர் காலித், உ.பி.போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் என நூற்றுக்கணக்கானோர் அடங்கிய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதே சமயம், முஸ்லிம்களைக் கருவறுக்க பகிரங்க அழைப்பு விடுக்கும் இந்துத்துவ வெறிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பா.ஜ.க. அரசு தனது பாசிசத்தை நிலைநிறுத்த, நியாயத்திற்காகப் போராடும் ஜனநாயகவாதிகளை நசுக்கும்  போக்கையும், இந்துத்துவ மதவெறியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்காததையும் இம் மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, அவர்களை விடுதலை செய்து, இந்தப் பாரபட்சமான போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

தீர்மானம்:12

உபா (UAPA) சட்டத்தை நீக்க வேண்டும்!

தனது அரசை எதிர்க்கும்  இந்திய மக்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த ரவுலட் சட்டத்தின் மறுவடிவமான

UAPA (Unlawful Activities Prevention Act)-என்ற "சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்" மிகப் பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி U.U. லலித் அவர்கள், சென்ற நவம்பர் 22 அன்று, மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு விழாவில், அரசின் பாரபட்ச நடவடிக்கையால் அப்பாவிகள் கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாகவும், இது தவிர்க்கவும், தடுக்கவும்பட வேண்டும் எனவும், காரணமில்லாத கைது நடவடிக்கைகளால், நீதிமன்றத்தின் சுமை அதிகரிப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 80 சதவீதத்திற்கு மேல் விசாரணைக் கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 20 சதவீதம் மட்டுமே தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

எனவே, பல அப்பாவிகளின் வாழ்வை சீரழித்து, அவர்களுடைய எதிர்காலத்தையும், குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தையும் அழித்தொழிக்கும் UAPA சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:13

NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கலைக்கப்பட வேண்டும்!

மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, ஒன்றிய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள,

NIA என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாகக் கலைத்து விட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு CBI எனப்படும், மத்திய புலனாய்வு நிறுவனம் மட்டுமே புலனாய்வுக்கு பயன்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:14

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், நீதிபதி சச்சார் கமிட்டி ஆகியவை, அகில இந்திய அளவில் கள ஆய்வு செய்து திரட்டிய தரவுகள் அடிப்படையில், ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம்,சமூக நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் பரிதாபகரமாக உள்ளது என தெரிய வந்தது.

அதனடிப்படையில், முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிதளவேனும் உயர்த்தும் நோக்கத்தில் அகில இந்திய ரீதியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.        

ஆனால், அனைத்து சிறுபான்மையினருக்கும் சேர்த்தே வெறும் 4.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறையில் உள்ளது.

எனவே, முஸ்லிம்களுக்கு குறைந்தபட்ச நீதி வழங்கிடும் வண்ணம் அகில இந்திய ரீதியில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:15

பறிக்கப்பட்ட சிறுபான்மை கல்வி உதவித் திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும்!

2006 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைமையிலான அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திவந்த, சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்தை, தற்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்ற நவம்பர் 28 அன்று நீக்கியதை இம்மாநாடு கண்டிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சேர்க்கை கட்டணம், டியூசன் கட்டணம், பராமரிப்பு கட்டணங்கள் போன்றவற்றில் சிறுபான்மை சமூகங்களின் மாணவர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம்:16

வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் குறித்த வழக்கை விசாரித்த 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில், 3 பேர் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், 2 பேர் அச்சட்டத்திற்கு எதிராகவும் சென்ற நவம்பர் 7 ந் தேதி முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர். அந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படப் போவது, தாழ்த்தப்பட்ட, , பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த சாமானிய மக்கள் தான்.

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான நீதி, சமத்துவம் கிடைக்க வேண்டும் என்றால், சாதி வாரி பிரதிநிதித்துவம் மட்டுமே ஒரே தீர்வு. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, ஒவ்வொரு சாதியினருக்கும் அவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூக நீதி என்பதைப் புரிந்து அதற்கேற்ப கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளையும், சமூகநீதி ஆர்வலர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:17

தேர்தல் ஜனநாயகம் காக்க வாக்குச் சீட்டு முறையே சிறந்த வழி!

ஆர்.எஸ்.எஸ்.ஸின் பாசிச மதவெறிச் செயல் திட்டங்களை செயல்படுத்த முனையும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், சாமானிய ஏழை,எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பாதாளத்தில் தள்ளி, பெரு முதலாளிகளை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் அதன் மோசமான பொருளாதாரக் கொள்கையையும் நாட்டு மக்கள் வெறுப்புடன் உற்று நோக்குகிறார்கள்.

பெரும்பான்மை மக்களின் மனநிலை பா.ஜ.க.விற்கு எதிராக இருந்தபோதும், தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு காரணம் தேர்தல் தில்லுமுல்லுகள் தான். அதற்குத் துணையாக நிற்பது EVM எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் நிரூபித்த பிறகும், அதை நம்புவது மடமையாகும்.

தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் எங்குமே EVM பயன்படுத்துவது கிடையாது. வாக்குச் சீட்டு மூலமே தேர்தல்கள் நடைபெறுகிறது.

மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், ஜனநாயக மாண்புகளைப் பேணி தேர்தல்கள் நியாயமாகவும், ஓரளவு நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டுமென்றால், மின்னணு வாக்குப் பதிவு முறையை நீக்கி, வாக்குச் சீட்டு மூலம் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

EVM-ல் மோசடிகள் நடக்கும் என்ற நிலையில், புலம் பெயர்ந்த மக்களும் வாக்களிக்க ஏதுவாக RVM என்னும் Remote Voting Machine -ஐ அறிமுகப்படுத்த உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மேலும் மோசடிக்குத் தான் வழிவகுக்கும்.

தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில், EVM ஐயும், RVM ஐயும் நடைமுறைப்படுத்தும் செயலை தவிர்த்து, இனி வரும் காலங்களில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் எடுக்கும் வகையில் பெரும் போராட்டத்தை கையிலெடுத்து, மாபெரும் மக்கள் இயக்கமாக இதை மாற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:18

சிறைவாசிகள் முன் விடுதலையில் மதப்பாகுபாடு கூடாது!

நாட்டின் முக்கியத் தலைவர்களின் பிறந்த நாளன்று, நீண்ட காலங்கள் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில், முன் விடுதலைச் செய்யும் முறை அனைத்து மாநில அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2002 குஜராத் இனப்படுகொலையின் போது, பில்கீஸ் பானு வழக்கில் குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தினர் 11 பேரை எரித்துக் கொன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் - கொலையாளிகள், குஜராத் மாநில பா.ஜ.க.அரசின் கோரிக்கை அடிப்படையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில், கொடுங்குற்றவாளிகள் என பட்டியலிடப்பட்டவர்கள் கூட விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மதக் கண்ணோட்டம் கூடாது என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில், தமிழக ஆளுநர் வழக்கம் போலவே இதையும் கிடப்பில் போட்டுள்ளதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க எடுத்த முயற்சியை முஸ்லிம் கைதிகள் விஷயத்திலும் எடுத்து சமநீதியை நிலைநாட்ட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. 

தீர்மானம்:19

நீட் தேர்வை ஒழித்துக் கட்டுக!

கிராமப்புற மற்றும் ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைத்து அவர்களுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நீட் துழைவுத் தேர்வு, நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு என்னும் சமூகநீதியையும் கேலிக்கூத்தாக்கி விட்டது. எனவே, NEET-ஐ உடனடியாக ரத்து செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடாமல் ஆவண செய்ய இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:20

விகிதாச்சார பிரதிநிதித்துவமே உண்மையான ஜனநாயகம்!

தற்போது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் பிரிட்டன் பாணியிலான தேர்தலில் மக்களின் எதார்த்தமான மனநிலையைப் பிரதிபலிக்கும்படி நியாயமான வகையில் மக்கள் பிரதிநிகளின் தேர்வு அமைவதில்லை.

செலுத்தப்படும் வாக்குகளில் பிற கட்சிகளைவிட கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைப்பதால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கணிசமான வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவம் கிடைக்கும் நிலையோ அல்லது அறவே பிரதிநிதித்துவமே இல்லாது போகும் நிலையோ ஏற்படுகிறது.

இந்தியா போன்ற பல்சமய, பல கலாச்சாரப் பின்னணி கொண்ட தேசிய இனங்கள் அடங்கிய தேசத்தில், இத்தகைய பிரிட்டிஷ் பாணி தேர்தல் முறை மூலம் அனைத்து  தரப்பினருக்கும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ப நியாயமான பிரதிநிதித்துவம் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கிடைப்பதில்லை.

இந்தப் பெருங்குறையைக் களையும் வண்ணம் ஜெர்மன் பாணியிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல்களை நடத்தும் வண்ணம் தேவையான அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:21

பொது சிவில் சட்டத்தை தமிழக முதல்வர் எதிர்க்க வேண்டும்!

பொது சிவில் சட்டத்திற்கான முன்னோட்டமாக, நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்தபடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைத் தவிர, வேறு மாநில அரசுகள் இதற்காக எந்தக் கமிட்டியையும் அமைக்காத நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயாணன் தலைமையில், மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர்கள் பிரபு, முபீன் ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸ்ஸா, பிஹார், மே. வங்கம் என பல்வேறு மாநில முதல்வர்களெல்லாம் இதற்கான எந்த முயற்சியையும் எடுக்காத நிலையில், தமிழக முதல்வருக்கு மட்டும் என்ன நெருக்கடி ஏற்பட்டது என்ற வினா எழுந்துள்ளது.

பொது சிவில் சட்டம் கூடாது என்ற சமூகநீதிக் கோட்பாட்டைக் கொண்ட தி.மு.க., மற்ற மாநிலங்களை விட இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்; இதற்கு எதிராக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களை அணிதிரட்டி இருக்க வேண்டும். மாறாக உடனடியாக பா.ஜ.க. வின் மதவாதக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை உடனே கலைக்க வேண்டும். பொது சிவில் சட்டம் குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை தமிழக முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வரை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:22

அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு!

சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:23

முழு மது விலக்கு!

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்த பின் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்துள்ளது. குடிகாரக் கணவர்களால் பெண்களின் இன்னல் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே பொரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளன. பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கும் குடிபோதையே முக்கியக் காரணமாக அமைந்துள்ளளது. 

எனவே வருமானத்தை கவனத்தில் கொள்ளாமல் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:24

தமிழக அரசுக்கு கோரிக்கைகள்!

அ) சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்!

தமிழ்நாட்டில் மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏழ்மை நிலையிலும், கல்வியிலும்,  வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்களுக்கான சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.  

ஆ) இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருதல்!

முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சீரான இடஒதுக்கீடு வழங்கப்படும் வரை முஸ்லிம்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை, உடனடியாக 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்வரை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இ) பள்ளித் தேர்வு  அட்டவணை மாற்ற வேண்டும்!

இந்தக் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச்-2023ல் நடைபெற உள்ளது. இதில் சில தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாட பரீட்சைக்கும் இடையில் சில நாட்கள் இடைவெளி உள்ளதால், முஸ்லிம் மாணவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை தடையின்றி நிறைவேற்றும் பொருட்டு, வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளை வேறு நாட்களுக்கு மாற்றி வைக்க வேண்டுமென தமிழக அரசையும், பள்ளிக்கல்வித் துறையையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:25

நன்றி அறிவிப்பு!

இம்மாநாட்டை சிறப்பாக நடத்த அருள் புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் அழைப்பை ஏற்று நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் இம்மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாத உறவுகளுக்கும்,

இம்மாநாட்டிற்கான பெருமளவிலான பொருளாதாரத் தேவைகளுக்கு வாரி வழங்கிய மக்களுக்கும், மாநாட்டின் சில செலவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கும்,

மாநாட்டிற்கான திடலை எவ்வித பிரதிபலனும், எதிர்பாராமல் வழங்கி முழு ஒத்துழைப்பு கொடுத்த அப்துல் ஜப்பார் மற்றும் அப்துல் வாஹித் சகோதரர்களுக்கும்,

மாநாட்டிற்கு வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி செய்து கொடுத்து தங்களின் இடத்தை பிரதிபலன் பார்க்காமல் மனமுவந்து வழங்கிய மொராய்ஸ் சிட்டி நிர்வாகத்துக்கும்,

மாநாட்டுக்கு வருவோர் தங்கி இளைப்பாற மற்றும் சமையல் செய்வதற்கும், இஸ்லாமிக் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மற்றும் ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் ஹாஸ்டல் ஆகிய இடங்களை எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கிய அப்துல்லாஹ் பின் ஆதம் அவர்களுக்கும்,

சிறப்பான முறையில் அரங்க அமைப்பு, ஒலி மற்றும் ஒளி, வீடியோ கவரேஜ் செய்து தந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்,

மாநாட்டில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் சிறந்த முறையில், குறித்த நேரத்தில் உணவு சமைத்து வழங்கி சிறப்பாக பணியாற்றிய சமையல் கலைஞர்களுக்கும்,

இம்மாநாட்டிற்கு அனுமதி அளித்ததோடு, வெள்ளமெனத் திரண்ட மக்களை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பும் அளித்த திருச்சி மாநகர காவல்துறைக்கும்,

மாநாட்டுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான  மக்களின் தேவைகளையும் மாநாட்டுப் பணிகளையும் சிறப்பாக செய்த தன்னலம்பாராத ஆண்கள் மற்றும் மகளிர் தொண்டர் அணியினருக்கும்,

மாநாடு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தியும், மாமனிதர் நபிகளாரின் சிறப்புகளை விளக்கியும் பொதுக் கூட்டங்கள், சிறு கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி, துண்டு பிரசுரம் என பல்வகை பணிகளை முன்னெடுத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றிய மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவருக்கும்,

எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் இறைவன் கணக்கின்றி கூலியை தருவானாக! என பிரார்த்திக்கிறோம்.









No comments