நன்றியை சமர்ப்பிக்கிறோம்! NTF 08 ஜனவரி 2023 மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு!
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
காலச்சூழலின் தேவை கருதி, "மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு" நடத்த வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தீர்மானித்து அறிவித்ததும், தமிழக முஸ்லிம்களிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது.
உலக சரித்திரம் காணாத வரலாற்று நாயகர் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பதோடு, அகில மாந்தர் அனைவருக்கும் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே அழகிய முன்மாதிரி என்பதனை பறைசாற்றும் விதமாக நபிகள் பெருமானாரின் அழகிய வாழ்வியல் முறையையும், தன்னிகரற்ற போதனைகளையும் தமிழ் கூறும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கடமையை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டது.
08 ஜனவரி 2023 அன்று இந்தச் சிறப்பு மாநாட்டை திருச்சியில் நடத்துவது என்று தீர்மானித்து, அது தொடர்பான விளக்க பொதுக்கூட்டங்களை ஆங்காங்கே நடத்த தொடங்கியதில் இருந்தே மாவட்ட / கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் களமிறங்கி மக்கள் சந்திப்பு, தெருமுனை பிரச்சாரம், பல்வகை விளம்பரம் என பம்பரமாகச் சுழல ஆரம்பித்தனர்.
அன்றிலிருந்து, மாநாடு தினம் வரை தமிழகம் எங்கும் உள்ள கிராமங்கள் முதற்கொண்டு பெருநகரங்கள் வரை களப்பணியில் அயராது பாடுபட்ட நமது சகோதரர்களின் உழைப்பிற்கு அல்லாஹ் மாபெரும் வெற்றி அளித்தான். அல்ஹம்துலில்லாஹ்!
தமிழக முஸ்லிம் அமைப்புகளில் இளைய அமைப்பாகவும், போதுமான பொருளாதார கையிருப்பு இல்லாத அமைப்பாகவும் இருந்த போதிலும், தடுமாற்றமின்றி சத்தியத்தைச் சொல்லும் அமைப்பாகவும், கொள்கையில் உறுதியான அமைப்பாகவும் இருப்பதனால், அல்லாஹ் தனது மாபெரும் உதவியை தாராளமாக வழங்கி இந்த மாநாட்டை மாபெரும் வெற்றி ஆக்கித் தந்து விட்டான்! அல்லாஹ்வை மட்டும் நம்பி, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியதற்கான பலனை அல்லாஹ் இம்மாநாட்டில் கண்கூடாக காட்டிவிட்டான்.
அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!
எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, இரவு பகல் பாராமல் ஓய்வின்றி உழைத்த அனைத்து மட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டரணியினர் அனைவருக்கும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!!
உங்களுடைய அயராத உழைப்பிற்கான நற்கூலியை இறைவன் குறைவின்றி வழங்குவானாக!
இம்மாநாடு இத்தனை பெரிய வெற்றி பெற களப்பணியாளர்களுடைய உழைப்பு எந்தளவு பங்களிப்பு செய்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு, பொருளாதார உதவி செய்த சகோதர, சகோதரிகளின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். தங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவி செய்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக என துஆ செய்கிறோம்!!
மாநாடு இத்தகைய பிரமாண்டமாக அமைந்ததற்கு ஒரு காரணமாக அமைந்த மாபெரும் திடலை, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தந்து உதவிய அப்துல் ஜப்பார் மற்றும் அப்துல் வாஹித் சகோதரர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியும், துஆவும் உரித்தாகட்டுமாக!
பிற மதத்தைச் சேர்ந்த நிறுவனமாக இருந்த போதும், ஒரு இஸ்லாமிய மாநாட்டிற்கு வந்த வாகனங்களை நிறுத்துவதற்காக நல்லெண்ண அடிப்படையில் இடம் தந்து உதவிய 'மொராய்ஸ் சிட்டி' நிர்வாகத்திற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாட்டிற்கு நெடுந்தொலைவில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓய்வெடுக்கவும், அம்மக்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவும் தன்னுடைய பள்ளி/விடுதி வளாகங்களை தாராள மனதோடு தந்து உதவிய ஆதம் ஸ்கூல் நிறுவனர் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஆதம் அவர்களுக்கு எங்களுடைய மனமார்நந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதற்கான நற்கூலியை இறைவன் குறைவின்றி வழங்குவானாக என அவருக்காக துஆ செய்கிறோம்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், நபிகள் நாயத்தின் மீது கொண்டுள்ள நேசத்தால் தன்னார்வத்தோடு மாநாட்டிற்கு பெருமளவில் வருகை தந்த அமைப்பு சாராத முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுடைய நற்செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என துஆ செய்கிறோம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏன் நமக்கோர் அழகிய முன்மாதிரி என்பதனை அறிந்து கொள்வதற்காகவும், இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு, சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாகவும் எங்களுடைய அழைப்பினை ஏற்று ஆர்வத்தோடு கலந்து கொண்ட பிற மத சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாநாட்டிற்கு அனுமதி அளித்ததோடு, வெள்ளமெனத் திரண்ட மக்களை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பும் அளித்த திருச்சி மாநகர காவல்துறைக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாநாட்டின் வெற்றியை மாபெரும் கருணையாளன் அல்லாஹ்வுக்கே சமர்பித்து, மீண்டும் எங்களுடைய நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்!
இவண்,
பொதுச் செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments