முக்கிய அறிவிப்புகள்

மதுரா ஈத்காஹ் மஸ்ஜிதை சட்டவிரோதமாக அபகரிக்க சங்கிகள் முயற்சி! சட்டத்தை மதிக்காத உ.பி. நீதித்துறை! NTF கடும் கண்டனம்!

இறைவனின் திருப்பெயரால்...

26/12/2022

பத்திரிகை அறிக்கை!

மதுரா ஈத்காஹ் மஸ்ஜிதை சட்டவிரோதமாக அபகரிக்க சங்கிகள் முயற்சி!

சட்டத்தை மதிக்காத உ.பி. நீதித்துறை!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

NTF பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை!

சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்தொழித்து, மத வழிபாட்டு உரிமையை பறிப்பதில் இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில், 450 ஆண்டு கால வரலாறு மிக்க பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. ஏறத்தாழ 70 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்குப் பிறகு, 2019ல் உச்ச நீதிமன்றம் ஒரு அநியாயத் தீர்ப்பின் மூலம், முஸ்லிம்களிடமிருந்து பள்ளிவாசல் இடத்தைப் பிடுங்கி, இந்துத்துவாக்கள் கையில் ஒப்படைத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் கையெழுத்து கூட போடாத தீர்ப்பை வாசித்த, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த தீர்ப்பு பாபரி மஸ்ஜித்-ராமஜென்மபூமி வழக்குக்கு மட்டுமே பொருந்தும். இதே முறையிலான தீர்ப்பு மற்ற மஸ்ஜித் Vs கோயில் விவகாரத்திற்கு பொருந்தாது என்று கூறிய பிறகும், தீர்ப்பெழுதிய பேனா மை காயும் முன்பே, ராம ஜென்ம பூமியை மீட்டுவிட்டோம்; அடுத்து வாரணாசியையும், மதுராவையும் மீட்போம் என ஆர்.எஸ்.எஸ்.பரிவார சங்கிகள் பகிரங்கமாக அறித்தார்கள்.

பாபரி மஸ்ஜித் பாணியில் நீதித்துறையை வசப்படுத்தி வாரணாசி கியான்வாபி மஸ்ஜிதும், மதுரா ஈத்கா மஸ்ஜிதும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதை அப்போதே நமக்கு உணர்த்தியது.

முகலாய மன்னர் அவ்ரங்கஜேப்பால், வாரணாசியில் கட்டப்பட்ட கியான்வாபி மஸ்ஜித் இடம் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், மதுராவில் கட்டப்பட்ட ஈத்காஹ் மஸ்ஜித் இடம் கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் இந்துத்துவ பாசிசவாதிகள் நீண்ட காலமாக புரளியை கிளப்பி வந்தார்கள்.

இது சம்பந்தமாக வாரணாசி உரிமையியல் நீதிமன்றம், அலஹாபாத் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல அடுக்கு நீதிமன்றங்களில் மஸ்ஜித் நிர்வாகமும், இந்துத்துவாக்களின் தரப்பும் தொடுத்த பல வழக்குகளில் சட்டத்தின் அடிப்படையிலான சில தீர்ப்புகளும், சட்டத்தை மீறிய பல தீர்ப்புகளும் வந்தன.

1991 மத்திய அரசின் வழிபாட்டுத் தல சிறப்புச் சட்டங்களுக்கு எதிராக - நீதித் துறையின் உத்தரவுப்படி 3 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு பள்ளிவாசலுக்குள் சோதனை நடத்தியது.   

அங்கு, சிவலிங்கத்தைக் கண்டுபிடித்ததாக  கூறி, இறுதியாக ஒலுச் செய்யும் நீர்த்தடாகம் (ஹவுல்) உள்ள பகுதியை சீல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தால் வாரணாசியில் இன்னமும் பதற்றம் நிலவி வருகிறது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம், இந்து மகா சபைத் தலைவர் ராஜேஷ் சிங் சவுத்ரி என்பவர் ஈத்கா பள்ளிவாசலுக்குள் கிருஷ்ணர் சிலையை நிறுவ முயற்சித்தார்.

உ.பி.மாநில முன்னாள் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மதுராவை விரைவில் கைப்பற்றுவோம் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

அதன் தொடர் நடவடிக்கையாகத்தான், வாரணாசி பாணியில் நேற்று முன்தினம், மதுராவிலுள்ள ஈத்காஹ் மஸ்ஜிதுக்குச் சொந்தம் கொண்டாடி, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர், மதுரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வாரணாசியைப் போலவே, மதுரா நீதிமன்றமும் அம்மனுவை விசாரித்து, 1991 - மதவழிபாட்டுச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு,ஜனவரி  2ந் தேதி தொல்லியல்துறை ஆய்வு நடத்தி, 20ந் தேதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அக்கிரமம் நடந்துள்ளது.

ஜனநாயகத்தை காக்கும் இறுதிப் புகலிடம் நீதித்துறை என்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் தொடர்ந்து பொய்த்துப் போய் வருகிறது.

சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி இந்தியாவில் இல்லை. ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி பாசிசம் தான் கோலோச்சுகிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை அழித்தொழிக்கும் ஆட்சியாக உள்ளது. அதற்கு நீதித்துறையும் உடந்தையாக இருக்கிறது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள, முஸ்லிம்கள் வழிபாட்டுத்தல விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அத்துமீறலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது, 

நீதித்துறை பாரபட்சப் போக்கைத் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் முஸ்லிம்கள் மதச் சுதந்திரத்துடன், வழிபாட்டு உரிமையுடன் நிம்மதியாக வாழ, வேறு மாற்று வழி என்ன என்பதை இந்திய முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஐ.நா.மன்றம், OPEC நாடுகள், OIC நாடுகளின் கவனத்திற்காவது இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை தரவுகளுடன் இந்திய முஸ்லிம் தலைவர்கள் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

இவண்

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச்செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments