நாகர்கோவிலில் சமூக ஆர்வலர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறித் தாக்குல்! காவல்துறை மெத்தனம்!! NTF கண்டனம்!!!
10/12/2022
பத்திரிகை அறிக்கை
நாகர்கோவிலில் சமூக ஆர்வலர் மீது
கஞ்சா கும்பல் கொலைவெறித் தாக்குல்!
காவல்துறை மெத்தனம்!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கண்டனம்!
NTF பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டாரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர் நேற்று முன்தினம், கஞ்சா கும்பலைச் சேர்ந்த மூன்று ரவுடிகளால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சமூக ஆர்வலரான அப்துல் ரஹ்மான், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பலைச் சேர்ந்த சமூக விரோதிகளான, சமீர், ஆசிக், அப்துல் ரஹீம் ஆகிய மூவரும் அப்துல் ரஹ்மான் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இந்த அக்கிரமச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாக கண்டிக்கிறது.
அப்துல் ரஹ்மானை தாக்கிய சமூக விரோதிகள் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கிலும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யாமல், நாகர்கோவில் காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குட்கா,கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவரும் தமிழக காவல் துறை தலைைமையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை செயல்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.
சமீர், ஆஷிக், அப்துல் ரஹீம் ஆகிய கஞ்சா வியாபாரிகளையும், அவர்களுக்கு பின்புலத்தில் இயங்கும் சமூக விரோதிகளையும் உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் மாணவ மற்றும் இளைஞர் சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அம் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
குமரி மாவட்ட காவல்துறை உடனடியாக மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச் செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments