பா.ஜ.க. அரசின் பொது சிவில் சட்ட முயற்சிக்கு தமிழக தி.மு.க. அரசு துணைபோவதா? NTF தமிழக முதல்வருக்கு கேள்வி!
01/11/2022
பத்திரிக்கை அறிக்கை
பா.ஜ.க. அரசின் பொது சிவில் சட்ட முயற்சிக்கு தமிழக தி.மு.க. அரசு துணைபோவதா?
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) தமிழக முதல்வருக்கு கேள்வி!
NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:
மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
கஷ்மீர் விவகாரம் - 370 சட்டப்பிரிவு நீக்கம், ஒருங்கிணைந்த கஷ்மீரை துண்டாடியது, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் என தொடர்ந்து அரசியலமைப்பு வழங்கிய சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.
அதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் உரிமையைப் பறிப்பதாக நினைத்துக்கொண்டு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.
ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில், இந்து ஓட்டுக்களைத் திரட்டுவதற்காக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
2024 மக்களவைப் பொதுத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்துக்கள் ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதற்காக, பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியை எடுத்துள்ளது.
இதற்கான பரிந்துரைக்காக, சட்டம்- நீதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவை, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுசில் குமார் மோடி என்பவர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்தது. பா.ஜ.க. எம்.பி. தலைமையிலான குழுவின் அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
நாடு முழுவதும் கருத்தாய்வு நடத்தி பரிந்துரைக்க வேண்டும் என்பதால், ஒரு கமிட்டியை அமர்த்தி இதற்கான வேலைகளை முடுக்கிவிடும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்தது.
ஒன்றிய அரசின் இந்த மாபாதகச் செயலுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைத் தவிர வேறு மாநில அரசுகள் இதற்காக எந்தக் கமிட்டியையும் அமைத்ததாகத் தெரியவில்லை.
விடியல் அரசு, திராவிட மாடல் அரசு, மதச்சார்பின்மை -சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் அரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, பா.ஜ.க. இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு உடனே நிறைவேற்றிட ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயாணன் தலைமையில், மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், வழக்கறிஞர்கள் பிரபு, முபீன் ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸ்ஸா, பிஹார், மே. வங்கம் என பல்வேறு மாநில முதல்வர்களெல்லாம் இதற்கான எந்த முயற்சியையும் எடுக்காத நிலையில், தமிழக முதல்வருக்கு மட்டும் என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பொது சிவில் சட்டம் கூடாது என்ற சமூகநீதிக் கோட்பாட்டைக் கொண்ட தி.மு.க., இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமே? இதற்கு எதிராக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களை அணிதிரட்டி இருக்க வேண்டாமா? மாறாக உடனடியாக பா.ஜ.க. வின் மதவாதக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை உடனே கலைக்க வேண்டும். பொது சிவில் சட்டம் குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதச் சார்பற்ற ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. அரசின் இந்தச் செயலின் விபரீதத்தைச் சுட்டிக்காட்டவேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதத்தினரும் தங்களின் மதக் கோட்பாட்டிற்கு ஏற்ப, திருமணம், விவாகரத்து உரிமை, வாரிசுரிமை, சொத்துப் பிரிவினை, இறப்பு, மத அனுஷ்டானங்கள் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். இது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை.
முஸ்லிம்கள் மட்டுமல்ல; இந்துக்களிலும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் என பல்வேறு சமூகங்கள் சிவில் விஷயங்களில் தங்களுக்கென பிரத்தியேக வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.
இந்து என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டவர்களில் கூட அனைத்து பிரிவினரும் தங்கள் திருமணம், விவாகரத்து, வாழ்வியல், சொத்து விவகாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களில் ஒரே (UNIFORM) நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இதை மீறி பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், அனைவரும் வெகுண்டு எழுவார்கள். நாடு உள்நாட்டுப் போரைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்.
பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மத, இன மக்களுக்கும் எதிரானது. நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கக் கூடியது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச் செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments