முக்கிய அறிவிப்புகள்

சூளுரை ஏற்போம்! இன்று - அக்டோபர் 2

சூளுரை ஏற்போம்!

இன்று - அக்டோபர் 2

அறவழியிலான அஹிம்சை போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை வீழ்த்தி இந்தியாவை வென்றெடுக்க முடியும் என்று நம்பினார் காந்தியடிகள். அவரது அஹிம்சை போராட்டத்திற்கு தேசபக்த இந்தியர்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள்.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைத் திரட்டி காந்தியடிகள் அறிவித்த முதல் விடுதலைப் போராட்டம் - 'ஹர்த்தால்' என்னும் கடையடைப்பு - வேலை நிறுத்தப் போராட்டம்.

விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை ஒடுக்கவும், ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தலைதூக்கும் போராளிகளை அச்சுறுத்தி கருவறுக்கவும் ஆங்கிலேய அரசு, 'சர் சிட்னி ரௌலட்' என்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது.

அந்தக் கமிட்டி தான் முதல் முதலாக, மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் மக்கள் விரோத ஆள்தூக்கி கறுப்புச் சட்டத்தை வடிவமைத்தது.

இந்தியாவுக்கான இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் ஒப்புதலுடன் ஆங்கிலேயே அரசு, 1919 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இந்த அடக்குமுறைச் சட்டத்தை நிறைவேற்றி அறிவித்தது. அதுதான் 'ரெளலட் சட்டம்'.

இதை எதிர்த்து தான் காந்தியடிகள், சட்டம் நிறைவேற்றப்பட்ட 20 நாட்களில் 1919 ஏப்ரல் 7 ஆம் நாள் ஹர்த்தால் போராட்டத்திற்கு இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியடிகள் அழைப்பு விடுத்த முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயர்களின் கறுப்புச் சட்டத்திற்கு எதிராகத் தான் இருந்தது.

நடைமுறையில் இருக்கும் குற்றவியல் நடைமுறை தண்டனைச் சட்டத்தின் மூலம், காலனி ஆதிக்கம் தன் விருப்பப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து நியாயத்தின் குரலை ஒடுக்க முடியாது என்பதால், இரும்புக் கரம் கொண்டு அடக்கி சிறையில் தள்ள காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டதே ரெளலட் சட்டம்.

-தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாரையும் சந்தேகிக்கலாம்.

-அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்களை எந்த வித பிடியாணை(Warrant) இல்லாமலும் வீடு புகுந்து சோதனை செய்யலாம்; கைது செய்யலாம்.

-குற்றப்பத்திரிகை இல்லாமல்,வழக்கு நடத்தாமல், எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கலாம்.

இது தான் மனித வேட்டைக்காக வெள்ளையன் கொண்டு வந்த ரெளலட் சட்டத்தின் முக்கியமான விதி.

இதைத் தான் காந்தியடிகள் மக்களைத் திரட்டி எதிர்த்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த அஹிம்சைப் போராட்டத்தில் தான் நிராயுதபாணிகளாக திரண்டிருந்த அப்பாவி மக்கள் அமிர்தசரஸ் அருகில் ஜாலியான் வாலாபாக்கில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பிரிகேடியர் ஜெனரல் R.E. டையர் உத்தரவிட, 50 பேர் கொண்ட ஆயுதப்படை 1650 சுற்றுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பல நூற்றுக்கணக்கானோர் வீர மரணம் அடைந்தார்கள்; ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்புகளை இழந்தார்கள்.

இந்த நிகழ்வு இந்திய சுதந்திரப் போர் வரலாற்றின் கறுப்பு அத்தியாயமாக இன்றைக்கும் கருதப்படுவதைக் காண்கிறோம்.

இந்த வரலாற்று நிகழ்வை ஏன் இன்று நினைவுபடுத்துகிறோம் என்றால், காந்தியடிகள் எதற்காக ஹர்த்தால் போராட்டம் அறிவித்தாரோ, ஜாலியான் வாலாபாக் படுகொலைகள் நிகழ்ந்ததோ, அந்த ரௌலட் சட்டத்தின் மறுவடிவம் தான் உபா (UAPA) என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்.

ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. என்னும் புலனாய்வு அமைப்பு இருக்கிறது. அது ஒன்றிய அரசின் ஏவலுக்கு ஏற்ப கடந்த காலங்களில் ஏராளமான வழக்குகளை புலனாய்வு செய்துள்ளது. ஆனால் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசோ சி.பி.ஐ.யோ தன்னிச்சையாக ஒரு மாநிலத்தில் தலையிட முடியாது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தை நீர்த்துப்போகச்செய்து ஒன்றிய அரசின் அடக்கு முறைப் போக்கை நிலைநாட்டவே NIA என்னும் தேசிய புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டது.

ரெளலட் சட்டம் போலீசுக்கு வானளாவிய அதிகாரத்தை அளித்து ஆங்கிலேய அரசின் கையில் இருந்தது. உபா சட்டம் NIA என்னும் தேசிய புலனாய்வு முகமைக்கு வானளாவிய அதிகாரத்தை அளித்து இந்திய ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது.

வெள்ளையன் தனது அரசை எதிர்க்கும்  இந்திய மக்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக எப்படி ரெளலட் சட்டத்தைப் பயன்படுத்தினானோ அதை விட பன்மடங்கு அதிகமாக ஆள்தூக்கி உபா சட்டத்தைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், என்.ஜி.ஓ.க்கள், ஜனநாயக அமைப்புகள், சிறுபான்மை மக்களின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றன.

10542 உபா(UAPA) வழக்குகளில் வெறும் 248 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இஸ்லாமிய மதப்  பிரச்சாரம் செய்து வந்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த அர்ஷி குறைஷி என்பவர் மீது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்; பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்; இளைஞர்களை மூளைச்சலவை செய்து ISIS அமைப்புக்கு அனுப்பினார் என்றெல்லாம் குற்றம் சுமத்தி உபா சட்டத்தில் 2016ல் NIA கைது செய்து சிறையிலடைத்தது. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று NIA சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் (30/9/2022) அவரை விடுதலை செய்துள்ளது. ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் அப்பாவி ஒருவர் ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். NIA எந்த அளவுக்கு ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கிறது.

ஆங்கிலேய அரசின் ரெளலட் சட்டத்தை காந்தியடிகள் எதிர்த்து போராடியது போல அதற்கு இணையான ஒன்றிய அரசின் உபா(UAPA) சட்டத்தையும் NIA அமைப்பையும் எதிர்த்து காந்தீய  வழியில் போராடி இந்திய ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் காப்பதற்கு  சூளுரை ஏற்போம்!

- ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments