முக்கிய அறிவிப்புகள்

பாப்புலர் ஃபிரண்ட் மீதான தடை: NTF கடும் கண்டனம்!

28/09/2022

பத்திரிகை அறிக்கை

பாப்புலர் ஃபிரண்ட் மீதான தடை:

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!

இந்திய முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான முன்னோட்டம்!

NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

UAPA என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் 4 துணை அமைப்புகளையும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளதை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாக கண்டிக்கின்றது.

மத்திய அரசு தனது கைத்தடிகளாக உள்ள NIA, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விட்டு, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அத்துமீறி சோதனைகளை நடத்தி எந்த வித சட்ட நெறிமுறைகளோ, நியாயமோ நேர்மையோ இல்லாமல் PFI இயக்க நிர்வாகிகள் 264 பேரை UAPA சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து விட்டு, புனையப்பட்ட காரணங்களை கூறி PFI ஐ இன்று தடை செய்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முழுக்க முழுக்க தகுதியான ஒரு பயங்கரவாத அமைப்பு உண்டு என்றால் அது ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளும் தான் என்பதை மறுக்க முடியாது.

பா.ஜ.க. அரசு இந்திய ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம், அரசமைப்பு சட்டம் போன்ற அடிப்படை நெறிகளுக்கு எதிராக, சிறுபான்மை இன அழிப்புக்கான பகிரங்க அறைகூவல், துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கையாளும் பயிற்சி, குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் என  நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.பரிவார அமைப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் துணிவில்லாத பா.ஜ.க. அரசு, பாதிக்கப்படும் சிறுபான்மை இன அமைப்புகளை குறி வைத்துத் தாக்குகிறது. இது முஸ்லிம்களின் குரல் வளையை நெறிக்கும் அப்பட்டமான மதவெறிச்செயல்.

இந்திய முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான முன்னோட்டமே PFI மீதான தடையாக தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கருதுகிறது.

ஜனநாயக வழியில் சட்டத்திற்குப்பட்டு செயல்படும் அமைப்புகளைத் தடை செய்தால், அதன் விளைவு வன்முறையை நோக்கிச் செல்லும் என்பதே பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு. 2024 தேர்தலில் வாக்கு அறுவடை செய்ய இதைத் தான் பா.ஜ.க.விரும்புகிறது.

நாட்டைச் சீர்குலைக்கும் பா.ஜ.க.வின் மதவெறி பாசிசத்தை வீழ்த்த வேண்டிய முக்கியமான இந்த தருணத்தில்  சாதி, மதம், இனம், இயக்கம் மற்றும் அரசியல் மாச்சார்யங்களுக்கு அப்பாற்பட்டு ஜனநாயக சக்திகளும், அதன் தலைவர்களும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று, PFI போன்ற ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்கும் பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக, சட்டத்திற்குட்பட்டு  காந்திய வழியில் கடுமையான அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments