முக்கிய அறிவிப்புகள்

PFI, SDPI மீதான பாசிச பா.ஜ.க. அரசின் அடக்கு முறைகள்… கோழைத்தனத்தின் வெளிப்பாடு! NTF கடும் கண்டனம்!!

22/09/2022

பத்திரிகை அறிக்கை

PFI, SDPI மீதான பாசிச பா.ஜ.க. அரசின் அடக்கு முறைகள்…

கோழைத்தனத்தின் வெளிப்பாடு!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!!

NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலும், குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சென்னை, இராமநாதபுரம், தேனி, மதுரை, தென்காசி, காரைக்கால் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்களிலும், அதன் நிர்வாகிகள் வீட்டிலும் தேசிய புலனாய்வு மையம் (NIA) நடத்தி வரும் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த அமைப்புகள் பயங்கரவாதச் செயல்களுக்காக நிதி திரட்டுகின்றன; தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்க்கின்றன என்ற புனையப்பட்ட காரணங்களை முன்வைத்து, மத்தியில் ஆளும் பாசிச அரசு தனது கைப்பாவைகளான அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றை பயன்படுத்தி இது போன்ற ஜனநாயக அமைப்புகளை நசுக்க முனைகிறது.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, நாடு முழுவதுமுள்ள பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்களில் இதே காரணங்களைக் கூறி பல சந்தர்ப்பங்களில் ரெய்டுகள் நடந்துள்ளன. பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகளும் துறை சார்ந்த அமைச்சர்களும் பில்டப் காட்டினார்கள். ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. மக்கள் மத்தியில், இது பழிவாங்கும் நடவடிக்கை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்ததன் காரணமாக, இந்த இரண்டு அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகள் அல்ல; மக்களுக்கான சேவையில் ஈடுபடும் ஜனநாயக அமைப்புகள் என்பது மேலும் நிரூபணமானது.

அண்மையில், கோழிக்கோட்டில் பி.எஃப்.ஐ. நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்ததோடு, பா.ஜ.க.வின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.

இந்துத்துவாவிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் தென் மாநிலங்களில், கேரளாவும், தமிழ்நாடும் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் மேலும் வலிமைப் பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் பா.ஜ.க.இந்த அராஜக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது பா.ஜ.க.வின் கோழைத்தனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.

பா.ஜ.க.வின் குறி பாப்புலர் ஃபிரண்ட்டோ அல்லது எஸ்.டி.பி.ஐ.கட்சியோ மட்டும் அல்ல. பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக வலுவாக எதிர்க்கும் எந்த அமைப்பாக இருந்தாலும், அந்த அமைப்புகளை பா.ஜ.க. குறி வைத்து அழிக்கும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.

தமிழக முஸ்லிம்கள் அமைப்பு ரீதியாக பல்வேறு இயக்கங்களில் பயணித்தாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் நம்மில் யாரையும் அழிக்க நினைக்கும் இத்தகைய பாசிச சக்திக்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும்.

மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு பா.ஜ.க. வின் பாசிசத்தை வீழ்த்த முன்வர வேண்டும்.

இது போன்ற பழி வாங்கும் செயலை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். தகுந்த காரணம் இன்றி கைது செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)





No comments