முக்கிய அறிவிப்புகள்

மாணவிகளின் மானத்தோடு விளையாடிய நீட் தேர்வு! NTF கடும் கண்டனம்!!

21/07/2022

மாணவிகளின் மானத்தோடு விளையாடிய நீட் தேர்வு!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!!

NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

சென்ற ஜூலை 17 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. சுமார் ஒன்றரை இலட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகள் தேசிய தேர்வு முகமை (NTA) கல்வி அதிகாரிகளால் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனை செய்திருக்கிறார்கள். ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் குவிந்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த அராஜகச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த கேவலமான நடவடிக்கையை கண்டித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் புகார் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, மத்திய கல்வித் துறையின்

தேசிய தேர்வு முகமை டெல்லியிலிருந்து ஒரு விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளதாக அறிகிறோம்.

மாணவிகளின் மானத்தோடு விளையாடும் இந்த கேவலமான செயலை செய்தவர்கள், மாநில கல்வி வாரியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்தவர்கள்.

தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை விதிகளில் கூட குறிப்பிடப்படாத இந்த அநாகரீகச் செயலை ஏன் செய்கிறீர்கள் என்று மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், உள்ளாடைகளை கழற்றாவிட்டால் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டோம் என்று இறுமாப்புடன் சொல்லி இருக்கிறார்கள்.

மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? தேர்வு முகமையின் வாய்மொழி உத்தரவு கூட இல்லாமல் அவர்கள் எப்படி இந்த கீழ்த் தரமான வேலையை செய்திருப்பார்கள்? என்ற கேள்வி மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

தேர்வுக்கான விடைகளை மாணவிகள் தயார் செய்து அதைத் தங்களின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்லக்கூடும் என்ற ஈனத்தனமான எண்ணம் மனித நாகரீகத்திற்கே எதிரானது. உலகின் எந்த நாட்டிலும் இத்தகைய அவலம் நடக்காது.

மாணவிகளின் புகாரையடுத்து, கேரள மாநில காவல்துறை மனிதாபிமானமற்ற இந்தச் செயலில் ஈடுபட்டவர்களில் 5 பேரை கைது செய்துள்ளதும், நீட் தேர்வில் மாணவிகள் சந்தித்த அவலங்களை விசாரித்து 15 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் கொல்லம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்கு ஆணை பிறப்பித்திருப்பதும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

மத்திய கல்வித் துறை இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்களையும் பணிநீக்கம் செய்து, கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலம் அவமானப்பட்டு கூனிக்குறுகிப் போயிருக்கும் மாணவிகளுக்கு ஆறுதலைத் தர வேண்டும்.

இந்த சோகத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி, உரிய முறையில் தேர்வு எழுத முடியாமல் மதிப்பெண்கள் குறையும் மாணவிகளுக்கு தேர்வு முகமை, தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது அவர்களின் மனக் காயத்திற்கு மருந்தாக மறு தேர்வு வாய்ப்பளிக்க வேண்டும்.

இந்த நிகழ்விலிருந்து மாணவ சமுதாயமும், அவர்களின் பெற்றோர்களும் உரிய பாடம் பெற வேண்டும். நீட் தேர்வு என்ற பெயரில் இது போன்ற மனித உரிமை மீறல்கள்,கேவலங்கள் நடக்கும்போது அந்த தேர்வை புறக்கணிக்க வேண்டும்.

விதி மீறிய சோதனையை நடத்தினால் நாங்கள் தேர்வை புறக்கணிப்போம் என மாணவிகள் துணிச்சலுடன் ஒன்று திரண்டு எதிர்த்து இருந்தால், இந்தக் கொடுமை நிகழாமல் தவிர்த்திருக்க முடியும்.

"கண்ணை விற்று ஓவியம் வாங்கலாமா? " என்று கேட்பதுபோல, தன்மானம், சுயமரியாதையை இழந்த கல்வி தேவையா?" என்பதை மாணவச் சமுதாயமும், பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச்செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments