சிறுபான்மையினர் மத வழிபாட்டுத்தல விவகாரம்: தமிழக அரசு சட்டம் இயற்றி தீர்வு காண வேண்டும் முதல்வருக்கு NTF கோரிக்கை!
15/07/2022
சிறுபான்மையினர் மத வழிபாட்டுத்தல விவகாரம்:
தமிழக அரசு சட்டம் இயற்றி தீர்வு காண வேண்டும்
முதல்வருக்கு NTF கோரிக்கை
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:
சென்ற 30/6/22 அன்று திருப்பூர் வேலம்பாளையம் பள்ளிவாசல் மாவட்ட நிர்வாகத்தால் பூட்டி சீல் வைக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
திருப்பூர் முஸ்லிம்களால் பிரதான சாலைகள் முடக்கப்பட்டன. ஒருபுறம், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் வாரிய கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து பள்ளிவாசலை பாதுகாக்க முறையிட்டார்கள்.
மற்றொரு புறம்
வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களும், எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர்களும் துரித கதியில் இயங்கி, உயர்நீதிமன்றத்தை அணுகியதால், அன்று மாலையே அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு, ஜூலை 4 வரை பள்ளிவாசலை முடக்கும் நடவடிக்கையை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் அறிவித்ததால், திருப்பூர் முஸ்லிம்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தைக் கைவிட்டு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
வக்ஃப் வாரியத் தலைவரும் தனது பொறுப்பை உணர்ந்து மறுநாளே அந்தப் பள்ளிவாசலுக்குச் சென்று, ஜமாத்தார்களை சந்தித்து ஆறுதல் கூறியதும் பாராட்டத்தக்க செயல்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அங்குள்ள முஸ்லிம்களின் சொந்த இடத்தில் தொழுகை நடந்து வந்த பள்ளிவாசல்; எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்; ஆறு ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள இந்து முன்னணியினர், குடியிருப்பாளர் சங்கம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று கூறி நீதிமன்றத்திற்கு சென்று பள்ளிவாசலை அகற்ற முயற்சிக்கிறார்கள்.
இறுதியாக 2019ல் நீதிமன்றம் பள்ளிவாசலை மூடும்படி அரசுக்கு-மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய பள்ளிவாசல் நிர்வாகம் தவறி இருக்கிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அ.தி.மு.க. அரசு, கொரோனா, ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்கள் மூடல் போன்ற காரணங்களால் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பிறகு வந்த தி.மு.க.ஆட்சியிலும் இதே நிலை நீடித்ததால் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில்தான், எதிர் (இந்து முன்னணி) தரப்பு மீண்டும் நீதிமன்றம் சென்று தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்கிறது.
அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் நிலை. இதை சமாளிப்பதற்காகவே பள்ளிவாசலை பூட்டி சீல் வைக்கும் முயற்சியில் அரசுத் துறை அதிரடியாக இறங்கியது.
2019 நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாகம் அப்போதே மேல்முறையீடு செய்திருந்தால், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்திருக்கும்.
பள்ளிவாசல் நிர்வாகம் இந்த வழக்கை முறையாக எதிர்கொள்ள தவறி இருக்கிறது. மேலும் அன்றைய வக்ஃப் வாரியமும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியான வழிகாட்டலை வழங்கத் தவறியதோடு, தனது பொறுப்பையும் தட்டிக்கழித்துள்ளது.
இதுபோல் வழிபாட்டுத்தல பிரச்சனை ஏன் உருவாகிறது என்பதையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் நாம் பார்த்தோமேயானால், முழுக்க முழுக்க அரசின் வழிபாட்டுத் தல அனுமதிக்கான சட்ட நடைமுறைதான் காரணம் என்பதை விளங்க முடியும். அதிலும் சம நிலையற்ற, பாரபட்சமான அணுகுமுறைதான் இது போன்ற பிரச்சனைகளுக்கு மூல காரணமாக விளங்குகிறது.
போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நம் நாட்டில் சாலைகளை ஆக்கிரமித்தும், நீதிமன்ற வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பல்லாயிரக்கணக்கான சிறு சிறு கோயில்கள் உள்ளன. அவையெல்லாம் பஞ்சாயத்துக்களிலோ, ஊராட்சிகளிலோ, பேரூராட்சிகளிலோ, நகராட்சிகளிலோ, மாநகராட்சிகளிலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு துறையிலோ அனுமதி பெற்று தான் அமைக்கப்பட்டுள்ளன என்று யாராவது கூற முடியுமா?
சட்டவிரோதமாக அவை நிறுவப்பட்டுள்ளது தெரிந்திருந்தும் எந்த முஸ்லிம் தனிநபரோ அல்லது அமைப்போ அவற்றை அகற்றச் சொல்லி இதுவரை அரசாங்கத்திடம் முறையிட்டிருப்பார்களா? அல்லது நீதிமன்றத்தில் தான் வழக்குத் தொடர்ந்திருப்பார்களா? என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.
ஆனால் இதே போன்று முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களை அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து (இஸ்லாம் தடுத்துள்ளதால் நிச்சயமாக அமைக்க மாட்டார்கள் என்பது தனி விஷயம்.) அமைத்தால் அரசாங்கம் தான் விட்டு விடுமா? இந்துத்துவ இயக்கத்தினர் உண்டு இல்லை என நாட்டையே ரணகளப்படுத்தி இருக்க மாட்டார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அதேபோல கிறித்தவ மத தேவாலயங்களும் கூட பெரும்பாலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து அமைப்பதில்லை. அவர்களும் சொந்த இடங்களில்தான் தேவாலயங்களை அமைக்கிறார்கள். அதற்கும் இடையூறுகள் இருப்பதையும் மறுக்க முடியாது. பல தேவாலயங்கள் சூறையாடப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளன.
ஆக மதச்சார்பற்ற நாடு, அனைவருக்கும் சமமான மத வழிபாட்டு உரிமை என்பதெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏட்டில் தான் உள்ளதே தவிர நாட்டில் இல்லை என்பதே யதார்த்த நிலை.
மதச்சார்பின்மை, சமத்துவம், சமநீதி என்ற கொள்கையை உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் கூட, சிறுபான்மை சமுதாயங்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர வழிபாட்டுத்தல விவகாரத்தில் நியாயத்திற்காக உரத்த குரல் எழுப்பத் தயாராக இல்லை.
நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி தான். மக்கள் வசித்த நிலப் பரப்பும் அதற்கேற்பத் தான் இருந்தது. வழிபாட்டுத் தலங்களும் அதற்கேற்பத் தான் இருந்தன.
இன்று 130 கோடி மக்கள் தொகை. மக்கள் வசிக்கும் நிலப்பரப்பும், வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கையும் 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்றா இன்றைக்கும் இருக்கிறது?
எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் பெருகி இருப்பதைப்போன்று தான் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களும் பெருகி இருக்கின்றன. ஆனால் ஒரு பள்ளிவாசல் பழுதடைந்து மறுசீரமைப்பு செய்வதற்கு கூட ஏராளமான முட்டுக்கட்டைகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, இந்துத்துவ கும்பலின் அர்த்தமற்ற எதிர்ப்பு என முஸ்லிம்கள் அலைக்கழிப்படுகிறார்கள்.
சென்ற பிப்ரவரி மாதம் வேலூர் சைதாப்பேட்டை நவாப் ஹபீபுல்லாஹ் கான் பள்ளிவாசலை மறுசீரமைப்பு செய்த போது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிவாசலை மூடச் சொல்லி ஒரு மதக் கலவரத்தையே உருவாக்க முனைந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.
பள்ளிவாசல்களை புதுப்பிப்பதில் சிக்கல், புதிதாக பள்ளிவாசல் கட்டுவதற்கோ அல்லது மதரஸாக்கள் அமைப்பதற்கோ அரசின் அங்கீகாரம் பெறுவதில் ஏராளமான சிக்கல். சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தல விவகாரத்தில் இப்படி அரசாங்கம், நடைமுறை சாத்தியமற்ற மிகவும் கடினமான சட்ட நடைமுறைகளை வகுத்திருப்பதால் தான் பள்ளிவாசல் என்று அரசாங்க அங்கீகாரம் பெறாமல், பல ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.
திருப்பூர் வேலம்பாளையம் போன்று, தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் பல ஆயிரம் பள்ளிவாசல்கள் மீதும் வழக்குத் தொடர்ந்தால், எல்லா பள்ளிவாசல்களையும் பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிடுமா? நீதிமன்ற தீர்ப்பை அரசுதான் நிறைவேற்ற முடியுமா? நாடு என்ன கதிக்கு ஆளாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
நன்மையை நாடி, ஒருவர் தனது வீட்டை தொழுகைப் பள்ளிக்காகவோ, அல்லது மதரஸாவுக்காகவோ வக்ஃப் செய்ததன் அடிப்படையில், முஸ்லிம்கள் தொழுதுவந்தால், அது பள்ளிவாசல் அல்ல; குடியிருப்பு வீடு என்று தான் நகராட்சி அனுமதி பெற்றுள்ளார்கள். பள்ளிவாசலுக்கு அனுமதி பெறவில்லை; எனவே அதை இடிக்க வேண்டும் அல்லது பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று சொல்வார்களா? வக்ஃப் சட்டம் இதற்கு இடமளிக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இதற்கு ஒரே தீர்வு! தமிழக அரசிடம்தான் உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மத வழிபாட்டுத்தல அங்கீகாரத்திற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதன் மூலம் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் பொதுவான ஒரு விதியை உருவாக்க வேண்டும். எங்கெல்லாம் வழிபாட்டுத்தலத்திற்கான உரிய அனுமதி பெறாமல் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறதோ, அவற்றுக்கான ஆவணங்களை சரிபார்த்து, ஆவணங்களின் அடிப்படையில் அவற்றை வழிபாட்டுத்தலங்களாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
மேலும்,வழிபாட்டுத்தலங்களை புதுப்பிப்பதற்கும், புதிய வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தேவையற்ற சட்ட சிக்கல்களை, சிரமங்களை நீக்கி மக்களுக்கு எளிதான சட்ட நெறிமுறையை வகுக்க வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் வழிபாட்டு தலங்களுக்கான உண்மையான பாதுகாப்பாக இருக்கும்.
தமிழக முதல்வரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் இதில் உள்ள சிக்கல்கலைக் களைந்து முஸ்லிம் மற்றும் கிறித்தவர்களின் வழிபாட்டு உரிமையைக் காக்கும் வகையில் உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அனைத்து மதச் சார்பற்ற சக்திகளும் முஸ்லிம், கிறித்தவ சிறுபான்மை சமுதாய அமைப்புகளும், அதன் தலைவர்களும் இதற்கு வலிமையாக குரல் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments