முக்கிய அறிவிப்புகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு: பாதிக்கப்போவது பெரும்பான்மை மக்களே! வகுப்பு வாரி பிரதிநிதித்துவமே சரியான தீர்வு! NTF

07/11/2022

பத்திரிகை அறிக்கை

10% இடஒதுக்கீடு தீர்ப்பு:

பாதிக்கப்போவது பெரும்பான்மை மக்களே!

வகுப்பு வாரி பிரதிநிதித்துவமே சரியான தீர்வு!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

ஒன்றிய பா.ஜ.க. அரசு 2019 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு குறித்த அரசியலமைப்பு சட்டத்தின் 103 வது பிரிவில்

திருத்தம் செய்து, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தச் சட்டம், இட ஒதுக்கீட்டு கோட்பாட்டின் அடிப்படையையே தகர்க்கக் கூடியது; சமூக நீதிக்கு எதிரானது; அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது போன்ற காரணங்களை முன்வைத்து கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அனைத்து மனுக்களையும் ஒருங்கிணைத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி மற்றும் J.B.பர்திவாலா ஆகிய 3 நீதிபதிகள் உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டம் செல்லும் எனவும், நீதிபதி ரவீந்திர பட்  இந்தச் சட்டம் செல்லாது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் முரண்பட்ட தீர்ப்பளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்பை ஆதரித்துள்ளார். 

இன்று ஓய்வு பெறப் போகும் தலைமை நீதிபதி தனது இறுதி வழக்கில் அரசியல் சட்ட விழுமியத்தின் பக்கமும், சமூக நீதியின் பக்கமும் நின்று தனது நேர்மையை நிரூபித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

3 நீதிபதிகள் ஒத்த கருத்தில் தீர்ப்பளித்துள்ளதால், 103 வது விதியில் ஒன்றிய அரசு செய்த திருத்தத்தின்படி உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற எதிர் கருத்து பரவலாக சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படைக் காரணமே சமத்துவமும் சமூக நீதியும் தான். சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே இந்தத் தீர்ப்புச் சிதைத்து விட்டது.

இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோளாக பொருளாதாரத்தையும் முக்கிய காரணியாக எடுத்துக் கொள்வதாக இருந்தால், உயர் சாதியினரை விட ஏனைய அனைத்துப் பிரிவினரிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களும் தான் அதிகம்.

நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை பா.ஜ.க.வுக்கு இருந்திருக்குமேயானால், வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு இருக்குமேயானால், பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

உயர் சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்ற சட்டம், முழுக்க முழுக்க பா.ஜ.க. தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக நிறைவேற்றிய சட்டம். ஏற்கனவே நாட்டின் அனைத்துத் துறைகளும் உயர் சாதியினரால் கபளீகரம் செய்யப்பட்டு காவி மயமாகி வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மேலும் அவர்களின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் பொதுப் பிரிவில் போட்டியிடும் மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

மண்டல் கமிஷன் தொடர்பான இந்திரா சஹானி வழக்கில், அன்றைய தலைமை நீதிபதி M.N. வெங்கடாசலைய்யா தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 1992 நவம்பர் 19  தீர்ப்பில், இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது; இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் கூடாது என்ற தீர்ப்பை பா.ஜ.க. அரசும், இன்று தீர்ப்பு சொன்ன 3 நீதிபதிகளும் புறக்கணித்ததையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. அந்தத் தீர்ப்பும் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் 4 தூண்களில் இரண்டு தூண்களால் சமூக நீதி, சமத்துவம் சாகடிக்கப்படும் போது அதற்கெதிரான போராட்டம் வலிமை பெற வேண்டும். இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படப் போவது நிச்சயமாக SC / ST / BC / MBC / OBC பிரிவினர் தான். 

தங்களின் எதிர்காலத் தலைமுறை தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள இந்தப் பிரிவினர் அனைவரும் பா.ஜ.க.வின் இந்த அநீதியான சட்டத்திற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றத் தயாராக வேண்டும். இதில் கட்சி, அமைப்பு என்ற பேதம் பார்க்கக் கூடாது. மக்கள் சக்தி ஒன்றே சட்டத்தை மாற்றும் வலிமை படைத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான நீதி, சமத்துவம் கிடைக்க வேண்டும் என்றால், சாதி வாரி பிரதிநிதித்துவம் மட்டுமே ஒரே தீர்வு. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, ஒவ்வொரு சாதியினருக்கும் அவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூக நீதி என்பதைப் புரிந்து அதற்கேற்ப கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments