75 வருட இந்தியாவின் அடையாளத்தைத் தகர்த்தெறியும் சண்டாளிகள்!
75 வருட இந்தியாவின் அடையாளத்தைத் தகர்த்தெறியும் சண்டாளிகள்!
சர்வதேச நாடுகளிடம் இந்தியாவை சரணடைய வைக்காமல் விடமாட்டார்கள்!!
டைம்ஸ் நவ் டி.வி. விவாதத்தின்போது, கடந்த மே 27 அன்று நபிகளாரை இழிவுபடுத்திப் பேசிய பா.ஜ.க.வின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் விவகாரம் ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அரபுலக நெருக்கடியின் காரணமாக, கட்சி ரீதியான கண்துடைப்பு நடவடிக்கையை மட்டும் பா.ஜ.க. மேலிடம் எடுத்த நிலையில், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் கூட, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வன்முறை முத்திரை குத்தப்பட்டு, அடக்குமுறை செய்யப்படுகிறது. பா.ஜ.க. அரசுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள்.
நுபுர் சர்மா விவகாரம் தொடங்கி, வன்முறை, துப்பாக்கிச்சூடு, உயிர்ப்பலி என ஒவ்வொரு நிகழ்வினாலும் உலக அரங்கில் இந்தியாவின் மானம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு காரணகர்த்தாவான-ஜாமீனில் வெளிவந்து பா.ஜ.க.வின் எம்.பி. ஆன பிரக்யாசிங் தாக்கூர் ஆகிய இரு பெரும் பெண் பயங்கரவாதிகள் கக்கிய மதவெறி விஷத்தால் மேலும் தொடர்ந்து இந்தியா மற்றுமொரு கேவலத்தை சந்தித்துள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க.வின் நுபுர் சர்மாவின் பேச்சால் சர்வதேச நெருக்கடிக்கு இந்தியா உள்ளாகி, உலக நாடுகள் காரி உமிழும் நிலையில் சென்ற ஜூன் 10ந் தேதி,"இந்தியா இந்துக்களுக்கான நாடு; சனாதன தர்மமே இந்தியாவின் இறையாண்மை" என்று 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் அடையாளத்தை அழிக்கும் வகையிலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்தும் பேசியுள்ளார் மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதியும், பா.ஜ.க.வின் எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்கூர்,
2019 மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசம், போபால் தொகுதி வேட்பாளராக இவர் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணமே இவர் ஒரு இந்துத்துவ பயங்கரவாதி என்ற தகுதிதான். அந்த சந்தர்ப்பத்தில்தான் இவர் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை உயர்த்திப் பிடித்து, அவர் தான் உண்மையான தேசபக்தர் என்று புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தார்.
இப்போது இவரது பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது. இவரது பேச்சுக்கு, இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. மேலிடம் இவரைப் போன்றவர்களைப் பேச வைத்து அழகு பார்க்கிறது.
"வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நாள் அல்ல. மாறாக, அது பயங்கரவாதத்திற்கான நாள். பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கூடி, முஸ்லிம் அல்லாதவர்களை இனப்படுகொலை செய்யவும், இந்துக்களின் உடமைகளை கொள்ளை அடிக்கவும், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடவும், இந்துப் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கவும் பள்ளிவாசல்களில் திட்டமிடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) நடக்கும் பள்ளிவாசல்களை புல்டோசர்களால் தகர்த்து தரைமட்டமாக்க வேண்டும்."
என்று மற்றொரு பெண் பயங்கரவாதியான இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே குடியரசுத் தலைவருக்கு தனது இரத்தத்தினால் மனு அனுப்பியதாக உ.பி.மாநிலம் அலிகரில் தெரிவித்துள்ளார். அதுவும், நுபுர் ஷர்மா விவகாரம் சர்வதேச அளவில் பற்றி எரியத் தொடங்கிய ஜூன் 5ந் தேதி அன்று.
இவரது இந்தப் பேச்சுக்காக உ.பி. காவல்துறை வழக்கம்போல இவர் மீது கண்துடைப்புக்காக எப்.ஐ.ஆர். மட்டும் போட்டு காவல் நிலைய அலமாரியில் பத்திரமாக வைத்துவிட்டது.
எப்.ஐ.ஆர். மட்டும் போடப்பட்டு, சுதந்திரமாக உலா வந்த நிலையில் தான்,தேசிய ஊடகமான ஆஜ் தக் டி.வி. விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை விவரித்து மேலும் வன்முறையைத் தூண்டி துணிச்சலாக பேசியுள்ளார்.
இந்தப் பெண் பயங்கரவாதி பூஜா ஷகுன் என்பவர், சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் புதிதாக ஈடுபடவில்லை. நீண்டகாலமாக தொடர்ந்து முஸ்லிம்களுக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் சவால்விடும் வகையில் பேசி வருகிறார்.
சென்ற டிசம்பர் 2021 ஹரித்துவாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில், முஸ்லிம்கள் வெகுஜனக் கொலைக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். “ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் மக்கள்தொகையை அகற்ற விரும்பினால், அவர்களைக் கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரை (முஸ்லிம்களை) கொல்லத் தயாராக இருந்தால், நாம் வெற்றிபெற்று சிறைக்கு செல்வோம். நாதுராம் கோட்சேவைப் போல, நான் செயல்பட தயாராக இருக்கிறேன்,என்னைக் காக்க ஆயுதம் ஏந்துவேன்." என்று விஷத்தைக் கக்கினார்.
அதே நிகழ்வில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இன்று பெண்கள், கையில் வாள் எடுக்க வேண்டிய நேரம். எனது தாய்மார்கள் தங்கள் மகன்களை பலவீனமாக ஆக்காமல் அவர்களை பலசாலிகளாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்காவது அதர்மம் நிகழ்ந்தால் சொல்லுங்கள், அவற்றை வெட்டுவதற்கு நான் உங்களுடன் வருவேன். வழக்குகள் எதுவும் இருக்காது. ஆனால் சில நாட்களுக்கு ஒரு சிறிய சிரமம் மட்டுமே இருக்கும்; எங்களை அழைக்கவும், முஸ்லிம்களை அழிக்க நாங்கள் உங்களுடன் இருப்போம்." என்று பகிரங்கமாக பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்.
ஏப்ரல் 2020 ல், தப்லீக் ஜமாத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த அமைப்புக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
மத அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் பகைமையை ஊக்குவித்ததற்காகவும், பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காகவும் அப்போதும் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் சிறிது நேரம் மட்டும் போலிஸ் காவலில் வைத்து, மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மே 2019 ல், வி.டி.சாவர்க்கர் பிறந்த நாளைக் கொண்டாடியபோது, சாவர்க்கரின் பிறந்தநாள் பரிசாக மைனர் சிறுமிகளுக்கு கத்திகளை விநியோகித்து, இளஞ்சிறுமிகள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தார்.
ஜனவரி 2019 ல், மகாத்மா காந்தியின் உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவைப் புகழ்ந்து முழக்கங்களை எழுப்பினார். காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தார்.
இந்திய மண்ணில் இப்படியொரு பயங்கரவாதி இருக்க முடியுமா? என்று ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவரது குற்றப்பட்டியல் நீளுகிறது.
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், UAPA என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் என நாட்டின் உச்சபட்ச குற்றத்தடுப்பு சட்டங்கள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனையும் பிரயோகித்து சிறையில் தள்ளி பாடம் புகட்ட வேண்டிய இந்தப் பயங்கரவாதியான பூஜா சகுன் பாண்டேவை சுதந்திரமாக நடமாடவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை பேச வைத்து, அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டும் ஈனப் புத்தி கொண்ட உ.பி.பா.ஜ.க. அரசு, கண்துடைப்புக்காக சில வழக்குகளைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறது.
ஜனநாயக வழியில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் ஒன்றுமறியா அப்பாவி முஸ்லிம்களை மட்டும் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் சிறையிலடைக்கிறது. சுட்டுக்கொல்கிறது. வாழ்வாதாரங்களை சிதைக்கிறது. புல்டோசரால் வாழ்விடங்களை தகர்க்கிறது மதவெறி பாசிச பா.ஜ.க. அரசு.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்திட்டம் இந்தியாவை மட்டுமல்ல; பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் வரை இஸ்லாத்தை அழித்து, முஸ்லிம்களை ஒழித்து அகண்ட இந்துத்துவ பாரதமாக உருவாக்குவதுதான். சென்ற மாதம் கூட மோகன் பகவத், இன்னும் பத்தாண்டுகளில் அகண்ட பாரதத்தை அடைந்துவிடுவோம் என்று பேசினார்.
இந்தக் கருத்தை ஊட்டித்தான் ஏறத்தாழ நூறாண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். மதவெறியர்களை உருவாக்கியது. அப்படி உருவானவர்கள் தான் நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிந்தால், பிரக்யாசிங் தாக்கூர், பூஜா ஷகுன் பாண்டே உள்ளிட்டவர்கள்.
அவர்களுக்கு என்ன போதிக்கப்பட்டதோ அதைத்தான் அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான வெறி அவர்களின் இரத்தத்தோடு கலந்துள்ளது. ஆனால் அது எந்த அளவு ஆபத்தானது என்பதை விரைவில் உணர்வார்கள்.
சனாதன இந்துத்துவ தர்ம ஆட்சியா? அல்லது மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சிப் பொறுப்பா? என்ற கேள்வியை அரபு நாடுகள் மோடியை நோக்கி வைத்துள்ளன. அது விரைவில் ஐ.நா.வரை செல்லும். அப்போது முடிவுக்கு வரும் இந்த சங்கிகளின் ஆட்டம் முடிவுக்கு வரும்.
- ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
12/06/2012
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete