முக்கிய அறிவிப்புகள்

கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா? பாசிசத்தில் வீழ்ந்த UGC-யின் மிரட்டல் அறிவிப்பிற்கு NTF கடும் கண்டனம்!

பத்திரிகை அறிக்கை:

நாள்: 08/01/2025

கல்விக் கொள்கையா? 

காவிக் கொள்கையா?

பாசிசத்தில் வீழ்ந்த UGC-யின் மிரட்டல் அறிவிப்பிற்கு 

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் வெளியிட்டுள்ள UGC என்னும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான வரைவு விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் கல்வி நிலையங்களை மாநிலங்களிடம் இருந்து அபகரித்து கல்வியை முழுக்க முழுக்க ஒன்றிய பாஜக அரசின் பாசிச கோரப்பிடிக்குள் கொண்டு வரும் அபாயகரமான முயற்சி ஆகும்.

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாகத்தான் நமது அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வி என்பது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான Concurrent பட்டியலில் உள்ளது. 

அதனால், கல்விக் கொள்கையை திருத்தம் செய்தாலோ, கல்வி நிலையங்களுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்தாலோ அது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முடிவாக அமைய வேண்டுமேயன்றி, ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

ஆனால், அரசியல் சாசனத்தை அவமதிப்பதையே முழுநேரப் பணியாக செய்து கொண்டிருக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ள UGC  வரைவு அறிக்கையில்:

🎯ஒரு மாநிலத்தின் ஆளுநரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை தேர்வு செய்ய 3 நபர் கொண்ட தேர்வுக்குழுவை ஆளுநரே நியமிப்பார். அதாவது, தேர்வுக்குழு தலைவரை ஆளுநரே நேரடியாக நியமிப்பதோடு, UGC தலைவர் மற்றும் பல்கலைக்கழக செனட் பரிந்துரைக்கும் 2 நபர்களை தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆளுநர் நியமிப்பார்.

🎯துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் கல்வியாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கல்லூரி விரிவுரையாளர், பேராசிரியர் போன்ற பணி அனுபவம் கூட தேவை இல்லை. தொழில்துறை, பொதுத்துறை சார்ந்த, கல்விக்கு தொடர்பில்லாத அந்நியர் எவரையும் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

🎯UGC-யின் இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாத பல்கலைக்கழகங்களுக்கு UGC-யின் திட்டங்கள் மறுக்கப்படுவதோடு, அப்பல்கலைக்கழங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லுபடியாகாதவையாக அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்புகளின் உள்நோக்கமும், விபரீத விளைவுகளும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை.

தன்னுடைய ஆளுகைக்கு ஆட்படாத மாநிலங்களில் அடாவடிப் பேர்வழிகளை ஆளுநராக நியமித்து, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை சீர்குலைப்பதை எந்த வித உறுத்தலும் இன்றி செய்து வரும் ஒன்றிய பாசிச அரசு, இப்போது நேரடியாக கல்வி நிலையங்களை கொள்ளை அடிக்க வருகிறது.

இப்போதைய ஒன்றிய அரசு சூரப்பா போன்ற கல்வித் தரம் அற்றவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் பல்கலைக்கழக வேந்தர்களாக நியமித்து சீரழிந்த கதையை ஏற்கனவே நாடறியும்.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் உரிமைகளை கிஞ்சிற்றும் மதிக்காமல், நமது வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களை கபளீகரம் செய்யும் இந்த களவாளித்தனத்தை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

பல ஆண்டுகள் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் உட்பட பாஜக ஆளும் பல வட மாநிலங்கள் கல்வியில் மிக, மிக, மிகப் பின்தங்கியுள்ளன என்பது அரசு தரும் தரவுகளிலேயே பளிச்செனத் தெரிகிறது.

கல்வி குறிப்பாக உயர்கல்வி குறித்து பாஜகவிடம் உருப்படியான எந்தத் திட்டமோ, கொள்கையோ கிடையாது என்பதே இதன் பொருள்.

நிலைமை இவ்வாறிருக்க, பாஜக கால் பதிக்காத அல்லது கால் பதிக்க இயலாத தென் இந்தியா குறிப்பாக  தமிழ்நாடு பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை மிகவும் முன்னணியில் உள்ளது.

இதனை சீர்குலைக்கும் விதமாகவும், இந்துத்துவ சிந்தனை புகுத்தப்பட்டுள்ள விஷக்கிருமிகளை வேந்தர், துணை வேந்தர் என நியமித்து குலக் கல்வி, ஜோதிடக் கல்வி, வேத கல்வி என்ற போர்வையில் மாணவர்களை மூடநம்பிக்கையில் மூழ்கடித்து, எதிர்காலத்தில் சிந்தனைத் திறனற்ற, பகுத்தறியும் பண்பற்ற மூடர் கூட்டத்தை உருவாக்க முனைகிறது.

இதனை எப்பாடுபட்டாகினும் தடுத்து நிறுத்திட வேண்டும். 

இதற்கான மாநில அரசின் சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான போராட்டத்திற்கு மாநிலத்தின் நலன் விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகளும் துணை நிற்க வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.


இவண்,

பொறையார் அலி அஹமது,

செய்தித் தொடர்பாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).



No comments