முக்கிய அறிவிப்புகள்

மனித உரிமை போராளி தீஸ்தா செடல்வாட் கைது! NTF கடும் கண்டனம்!

26/06/2022

பத்திரிகை அறிக்கை

மனித உரிமை போராளி தீஸ்தா செடல்வாட் கைது! 

ஜனநாயகத்தின் உயிர்நாடியை அறுத்தெறியும் பா.ஜ.க.!!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!!!

NTF பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை:

நாடறிந்த மனித உரிமைப் போராளி தீஸ்தா செடல்வாட்டை பாசிச பா.ஜ.க. அரசு கைது செய்துள்ள நடவடிக்கை அப்பட்டமான அரச பயங்கரவாதத்தின் அடையாளம்.

2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையில் அன்றைய குஜராத் முதல்வரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடியின் கைவரிசை இருந்ததை நடுநிலையாளர்கள் யாருமே மறுக்க முடியாது.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி, மக்களைக் காப்பாற்ற கடமைப்பட்ட முதல்வர் மோடியே இந்தக் கொடூரத்தை பின்புலத்தில் ஆதரித்ததை நடுநிலையாளர்கள் அனைவருமே கண்டித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்வதானால், அன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வாஜ்பேயி கூட, "மோடி ராஜதர்மத்தை பேண வேண்டும்" என்று சாடினார்.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து, கருவறுத்ததையும், அதன் ஒரு பகுதியான அஹமதாபாத், குல்பர்க் சொஸைட்டியில் அன்றைய காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 65 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதையும், அந்த கோரக் கொலையிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த ஒரே பெண்மணியான இஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஸகிய்யாவையும், அவரது 20 ஆண்டு கால சட்டப் போராட்டத்தையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

மனித உரிமைப் போராளி தீஸ்தா செடல்வாட் என்ற பெண்மணி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடியவர். ஸகிய்யாவின் சட்டப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றவர். 

சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) மூலம் மோடியை புனிதராக சித்தரிக்கும் ஒரு மோசடி அறிக்கையை குஜராத் அரசு தயாரித்து, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் 2012ல் மோடிக்கும் இஹ்சான் ஜாஃப்ரி உள்ளிட்ட முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் சம்பந்தமில்லை என்று கூறி  நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

அதன்பிறகு தான் மோடியை விடுவித்தது செல்லாது என்று மேல் முறையீடுகள் உச்சநீதிமன்றம் வரை சென்றது. மோடிக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்று கூறி, அவரை தப்பிக்க வைக்க முயன்ற போதும் அவரை விடாமல் துரத்தி, அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆதாரங்களை திரட்டித் தந்து ஸகிய்யாவுக்கு துணை நின்று உச்சநீதின்றம் வரை சென்றவர் தீஸ்தா.

தீஸ்தாவைப் போன்றே, 2002ல் குஜராத் டி.ஜி.பி.யாக பதவியில் இருந்த ஆர்.பி ஸ்ரீகுமார் என்பவரும், குஜராத்தின் அன்றைய உளவுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் பட் ஐ.பி.எஸ். என்பவரும் நீதிக்கு சாட்சியாளர்களாக, மோடியின் முகமூடியை கிழிக்கும் வண்ணம் உண்மைச் சான்றுகளை மோடிக்கு எதிரான வழக்குக்கு ஆதரவாக திரட்டி, ஸகிய்யாவின் மேல்முறையீட்டு வழக்கிற்கு உதவினார்கள்.

ஆனாலும், வழக்கம்போலவே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாரபட்சமான போக்கைக் கையாண்டு வரும் உச்ச நீதிமன்றம், சென்ற 24 ஜூன் அன்று ஸகிய்யாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில், மோடி அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மோடிக்கு ஆதரவாக கொடுத்த அறிக்கையை ஏற்று, மோடிக்கு குஜராத் சம்பவத்தில் தொடர்பில்லை என்று தீர்ப்பளித்து முஸ்லிம்களின் 20 ஆண்டு கால சட்டப் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது.

யாரெல்லாம் மோடியின் அக்கிரமத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்களோ, அவரது முகமூடியை அம்பலப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் பொய் வழக்கில் கைது செய்து விட்டால், அடுத்து வேறு யாரும் பேச முன்வர மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு

நியாயத்திற்கான குரல்வளையை அறுத்தெறிய பாசிச மோடி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அதன் வெளிப்பாடுதான், குஜராத் சம்பவத்தின் உண்மையை வெளியிட்டு, மோடிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய ஸகிய்யாவுக்கும், தீஸ்தாவுக்கும் உறுதுணையாக நியாயத்தின் பக்கம் நின்ற குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் தீஸ்தா செடல்வாட் ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்ட குஜராத் காவல்துறை மஹாரஷ்டிராவுக்கு சென்று மும்பையில் நேற்று கைது செய்துள்ளது.

2002ல் இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம்களைத் தாக்கும்போது எதிர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட மோடியின் செயலை அம்பலப்படுத்தியதால், 1989 கலவர வழக்கில் கொலைப்பழியை சுமத்தி, பணிநீக்கம் செய்து சிறையில் இருந்து வரும் ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சய் பட்டையும் இந்த எப்.ஐ.ஆர். ல் சேர்த்து அவரையும் குற்றவாளியாக சேர்த்துள்ளது குஜராத் காவல்துறை.

பா.ஜ.க. அரசு தனது பாசிசத்தை நிலைநிறுத்த, நியாயத்திற்காக போராடும் ஜனநாயகவாதிகளை நசுக்கும்  போக்கை கைவிட வேண்டும்.

பொய் வழக்கை வாபஸ் பெற்று, கைது செய்துள்ள மனித உரிமை போராளி தீஸ்தா செடல்வாட்டையும், முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமாரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்களை எல்லாம் குற்றவாளிகளாக்க முயலும் பா.ஜ.க.வின் பாசிச போக்கை ஜனநாயக சக்திகள் வலிமையாக எதிர்க்க முன் வர வேண்டும்.


இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச்செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments